Skip to main content

ஆழமா... ஐயமா... மய்யம் - ஒரு வருடம்!

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

தான் தொட்ட துறைகளிலெல்லாம் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்த கமல்ஹாசன், 21.02.2018ல் மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார்.

 

maiam


 

அன்றைய நாளின் இரவு 7.40 மணியளவில் மதுரையில் கொடியேற்றி, கட்சிப் பெயரை அறிவித்தார். நேரத்தை குறிப்பிட்டுக் கூறவேண்டிய அவசியம். கணிப்புகள் ஆயிரம் வந்தபோதிலும் அதை யாராலும் சரியாக வெளியிட முடியவில்லை என்பதால்தான். இதை கட்சியை சேர்ந்தவர்களே கூறி இன்றுவரை வியக்கின்றனர். மக்கள் நீதி மய்யம் தொடங்கும் முன்பே ட்விட்டரில் அரசியல் கருத்துகளைக் கூறுவது, அரசுகளை விமர்சிப்பது, சமூக நடப்புகள் பற்றிய கருத்து ஆகியவற்றை கூறிவந்தார். அதன்பின் நடந்த பல நிகழ்ச்சிகளிலும் அவர் தனது அரசியல் விமர்சனத்தை கூறிவந்தார். மேலும் கட்சியைத் தொடங்குவதற்குமுன் கலைஞர் முதல் சீமான் வரை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். 'கமல் ட்விட்டர் அரசியலை மேற்கொள்கிறார், இது பலிக்காது' எனக் கூறியவர்களெல்லாம் இன்று பல முக்கிய அறிவிப்புகளையே ட்விட்டரின் வாயிலாக வெளியிடுகிறார்கள். அதுவரை இடதுசாரி, வலதுசாரி என்பது மட்டுமே இருந்துவந்த நிலையில் இந்தியாவிற்கே முன்னோடியாக மய்யம் என்ற கொள்கையுடன் களத்திற்கு வந்தது மக்கள் நீதி மய்யம். அதே நேரம் இந்த மய்ய நிலைப்பாடு என்பதன் மீது கேள்விகளும் விமர்சனங்களும் இன்றும் தொடர்கின்றன. திராவிடம், கழகம் என்ற இரண்டு வார்த்தைகளும் இல்லாமல் தமிழகத்தில் கட்சி தொடங்கியது, கட்சிக்கொடியை ஆறு மாநிலங்களைக் குறிக்கும் வண்ணம் வடிவமைத்தது, தொடக்க விழாவை கேள்வி பதில் கூட்டமாக நடத்தியது என புது அனுபவத்தைக் கொடுத்தது மக்கள் நீதி மய்யத்தின் தொடக்கவிழா. அதே நேரம் சற்று அந்நியமாகவும் உணரப்பட்டது. பெயரில் இல்லாத திராவிடம் கொடியில் இருந்தது, இரண்டிலும் இல்லாத தாய்மொழி கட்சி தொடங்கிய தினத்தில் இருந்தது. பிப்ரவரி 21 - உலக தாய்மொழி தினம் அன்று கட்சியைத் தொடங்கினார் கமல். 
 

எதையும் ஆழமாக சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை, கமலும் கொண்டிருந்தார் மய்யமும் கொண்டிருந்தது. அதனால்தான் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதன் அடி ஆழம்வரை சென்று ஆய்வு செய்தனர். தனது அருகில் துறை வல்லுநர்களை வைத்திருந்தது, மய்யத்தை கருத்தியல் ரீதியாக முன்னுக்கு அழைத்து வந்தது. கட்சி தொடங்கியவுடன் அறப்போர் இயக்கம் மூலம் தொண்டர்களுக்குத் தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் சொல்லிக்கொடுத்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மூலம் கிராம சபையை மீட்டெடுத்தது, கொசஸ்தலை ஆறு விஷயத்தில் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டது, திருச்சி மாநாட்டில் வல்லுநர்களின் தீர்வுகள் மூலம் காவிரி பிரச்சனை தீர மய்யம் வைத்த கோரிக்கை... இவைகளைப் போல பல நடவடிக்கைகள் இதற்கு உதாரணம்.

 

maiam


 

பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் என தேசிய அளவில் சில முதல்வர்களை சந்தித்துவிட்டு அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்று விட்டு கமல் நடத்திய முதல் மக்கள் சந்திப்பு மீனவர்களுடனானது. கட்சி தொடங்கிய கமல் மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளில் ஒன்று கிராமசபைக் கூட்டம். முன்பிருக்கும் அரசியல் கட்சிகள் இடையில் சில காலம் மறந்துவிட்ட கிராம சபைக் கூட்டத்தை மீண்டும் தொடங்கிவைத்தது, மக்கள் நீதி மய்யம். அதை சிறப்பாகவும் நடத்திக் காட்டியது. அதன்பிறகு திமுக, தான் விட்ட கிராமசபைக் கூட்டத்தை மீண்டும் எடுத்து நடத்தியது. அந்தளவிற்கு கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவைத்தை உணர செய்தது மய்யம். இதைத்தொடர்ந்து  ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சந்திப்பு, மாணவர்களுடனான உரையாடல் என இருந்தது மய்யம். கிராமங்கள் தத்தெடுப்பு, பவானி ஆறு, எண்ணூர் துறைமுகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். 'பொன்னாடை வேண்டாம், என்னை ஆரத்தழுவிக்கொண்டால் போதும்' என கட்டிப்பிடி வைத்தியத்தை மேடைகளில் செய்த கமல், அரசியல் கட்சி சம்பிரதாயங்கள் என்று இருந்த பல விஷயங்களை உடைத்தார் என்றே சொல்லலாம்.    

 

தமிழக கட்சிகள் பெரும்பாலும் தங்களது தகவல் தொழில்நுட்ப பிரிவை, சமூக ஊடகத் தொடர்பு பிரிவை இரண்டாம் பட்சமாகவே கருதின. ஆனால், மக்கள் நீதி மய்யமோ இவற்றைத்தான் தனது முக்கிய செய்தித் தொடர்பு வழிமுறையாக பயன்படுத்தியது. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே வலைதளம், செயலி, சமூக வலைதளப்பக்கம் என அனைத்தையும் கொண்டுவந்து சுறுசுறுப்பாக இயங்கியது. ‘மய்யம் விசில்’... சமூக பிரச்சனைகளை மக்கள் இந்த செயலி  வாயிலாக தெரிவிக்கலாம். அதை மக்களே உறுதிபடுத்துவார்கள். அதைத்தொடர்ந்து ஒரு கட்சி தன்னால் எவ்வளவு முடியுமோ அதை செய்தது மய்யம். இந்த செயலி, இந்திய அளவில் பல்வேறு பெரும் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியில் இரண்டு ஸ்மார்டீஸ் விருதுகளை வென்றது. “வணிக நோக்கில்லா சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் சேவை செயலி” என்ற பிரிவில் போட்டியிட்டு வெள்ளி விருதையும், ‘இடம் சார்ந்த சேவைகள்’ என்ற பிரிவில் போட்டியிட்டு, வெண்கல விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி இன்னும் சில விருதுகளையும் வென்றது.

 

maiam


 

கஜா புயல் மீட்பு பணி... இதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும், கஜா புயலின் கோரத் தாண்டவத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு நிவாரணங்களை வழங்கியது, அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற அறிஞர்களின் கருத்து உள்ளிட்ட தொடர் பணிகளையும் செய்தது மய்யம். மற்ற அரசியல் கட்சிகள், இந்த விஷயத்தில் சென்ற தூரத்தை விடவும் சற்று அதிகமாகவே பயணித்தது மக்கள் நீதி மய்யம். 

 

பிரச்சனைகளில் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரோடும் சேர்ந்து நிற்க முயன்றது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் பண்பாடாகவும் பார்க்கப்பட்டது. காவிரி பிரச்சனையில் அன்புமணி, தங்க தமிழ்செல்வன், பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு ஆகியோருடன் இணைந்து செயல்பட்டது ஒரு எடுத்துக்காட்டு.

 

'பணத்திற்காக அரசியலை நான் பயன்படுத்த மாட்டேன், இது சேவை, தொழிலல்ல' என்பதை பல இடங்களில் உறுதியாகச் சொன்னார் கமல். மய்யத்தின் மீதாகட்டும், கமலின் மீதாகட்டும் எந்தவொரு குற்ற வழக்குகளும் இல்லாதது மக்களிடையே நம்பிக்கையை கொண்டுவந்தது. ஆட்சிக்கு வந்தால் முதல் செயல்பாடாக ஊழலை ஒழிக்க பலமான லோக் ஆயுக்தா அமைப்பேன் என்பது கமல் சொல்லும் செயல்திட்டம். தற்போது அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா நீர்த்துப்போனது என்பது அவரின் கருத்து.   

 

maiam


 

இவையெல்லாம் மய்யத்தின் ஆழத்தை ஐயமில்லாமல் உறுதிசெய்தது. அதேவேளையில், கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே அதன் முக்கிய உறுப்பினர்கள் விலகியது சர்ச்சையை கிளப்பியது, சிறிது நம்பிக்கையை குறைத்தது. கமல் மட்டுமே கட்சியின் முகமாக இருப்பது, மாவட்ட நிர்வாகிகளை பரவலாக மக்கள் அறியாதது போன்றவை ஒரு பெரிய குறைதான். கடைக்கோடி கிராமங்களுக்கு இன்னும் முழுமையாகச் சென்றடையாதது, ஊர் ஊருக்குக் கிளைகள் அமைக்கப்படாமல் இருப்பது என்பதெல்லாம் வரும் காலத்தில் கடக்க வேண்டிய சவால்கள். தமிழக அரசை பல முறை வன்மையாக எதிர்த்த கமல், மத்திய அரசை எந்தப் பிரச்சனையிலும் தீர்க்கமாக எதிர்க்காதது இன்னும் கேள்விகளையே எழுப்புகிறது. ட்விட்டரில் செந்தமிழ் பேசிய கமல், இப்பொழுதுதான் ஸ்டாலின் எதிர்ப்பில் அரசியல் தமிழ் பேச ஆரம்பித்திருக்கிறார். 

 

கமல் பேசக்கூடியது மேல்மட்ட, படித்த மக்களுக்கானதாக இருப்பது இதுவும் தற்போது நிவர்த்தி செய்கிறார் கமல். தனது கொள்கைகளை, திட்டங்களை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் கூறாததும் ஒரு குறைதான். அரசியலுக்கு வருவதை இன்னும் உறுதி செய்யாத ரஜினிக்கு இருக்கும் ரசிகர் பலம், ரசிகர் மன்ற அமைப்பு, அரசியலுக்கு வந்து உறுதியாக செயல்படும் கமலுக்கு அந்த அளவுக்கு இல்லை என்பது துரதிருஷ்டவசமானது. ஆனாலும் ஓராண்டாக மய்யம் தினமும் மேம்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. தன் மீதான விமர்சனத்தை எதிர்கொண்டு பதில் கூறும் மய்யம், மக்களுக்கான சிறந்த திட்டங்களுடன் அரசியலை மேற்கொள்ள வாழ்த்துகள்... ஓராண்டுதான் முடிந்திருக்கிறது, இன்னும் ஒரு தேர்தலையும் சந்திக்கவில்லை, முதல் கூட்டணியை அமைக்கவுமில்லை என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் நீதி மய்யத்தின் தொடக்க விழாவில், அரவிந்த் கெஜ்ரிவால் சொன்ன வார்த்தைகள்... "தமிழக மக்களுக்கு இப்போது ஒரு நல்ல ஆப்ஷன் கிடைத்திருக்கிறது". மக்கள் அப்படி எண்ணியிருக்கிறார்களா என்பதை வரும் தேர்தல்களில் பார்ப்போம்.