Skip to main content

‘உலகக்கோப்பை டூ நோபல்’- இம்ரான் கானின் அரசியல் வரலாறு

Published on 02/03/2019 | Edited on 02/03/2019
imran khan


ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு புல்வாமாவில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த பிப்ரவரி 14 ல் இருந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இதனை அடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள பாலகோட்டில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதன் பின் பாகிஸ்தான் விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்த இந்திய எல்லைக்குள் அத்துமீறியது. இதன் பின் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் மிக்-21 பைசன் போர் விமானத்தில் சென்றபோது, பாக் போர் விமானம் எஃப்-16 மீது மோதியதால், அது பழுதடைந்தது. இதனால் வானில் பயணிக்கும்போதே பாராசூட்டை பயன்படுத்தி கீழ் இறங்கிவிட்டார் அபிநந்தன். பாக் எல்லைக்குள் அவர் விழுந்துவிட்டதால், பாக் ராணுவம் அவரை பிடித்தது. உலகரங்கில் பாகிஸ்தான் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று பல நாடுகள் கேட்டுக்கொண்டது. இந்திய அரசாங்கமும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைத்தது. அந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ”இரு நாடுகளும் போர் செய்ய வேண்டும் என்று எந்த பொது மக்களும் விரும்பவில்லை. இந்தியா தாக்குதல் நடத்தினால், நாங்களும் நடத்துவோம். ஆனால் நாங்கள் அமைதியான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என நினைக்கிறோம்” என்று இம்ரான் கான் பேட்டியளித்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், கைது செய்யப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை வீரரை உடனடியாக விடுவிக்கிறோம் என்று தெரிவித்து, கைது செய்யப்பட்ட அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் நாட்டில் இம்ரானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. அதைபோல நோபல் கமிட்டியில் 50,000 பேர் அவரை பரிந்துரை செய்துள்ளதாக தெறிவிக்கபட்டது. இப்படி சமீபத்தில் ட்ரெண்டில் உள்ள இம்ரான் கானின் அரசியல் பயணத்தை பற்றி பார்ப்போம்...
 

"நான் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் என்னை ஒரு சாதாரண வீரனாக எப்போதும் எண்ணியது இல்லை" இவ்வாறு 1992 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற பின் இம்ரான் கான் கூறுகிறார். பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லுமா என்று எல்லோரும் எண்ணியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து, அணியை சரியாக ஒருங்கிணைத்து வெல்ல வைத்தவர். கிரிக்கெட்டராக எல்லோர் மனதையும் கவர்ந்தவர், பின்னர் அரசியல்வாதியாக உருமாறினார் . 1996ஆம் ஆண்டு, தெக்ரிப் இ இன்சாப் என்னும் கட்சியை நிறுவினார்.  தெக்ரிப் இ இன்சாப் என்றால் நீதிக்கான இயக்கம் என்பதாகும். 1996 ஆம் ஆண்டில் இந்த கட்சியை துவங்கியிருந்தாலும், பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சிகளான ந-பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் பீப்பள் கட்சி ஆகிய இரு கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க இம்ரான் கானின் கட்சிக்கு பல வருடங்கள் எடுத்துக்கொண்டது. அதாவது கட்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்து சாதாரணகட்சியாகவே இருந்துவந்த நிலையில் 2013ஆம் ஆண்டில் மூன்றாம் கட்சியாக தேர்தலில் வெற்றிபெற்றது இம்ரானின் தெக்ரிகப் இ இன்சாப்.
 

2002 ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் வெற்றிபெற்ற இம்ரான் கான் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராகிறார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தேர்வானார். இந்த நேரம் கொஞ்சம் கூடுதலாக அவருக்கு ஒரு சலுகை கிடைத்தது. இம்ரானுடைய கட்சி பாகிஸ்தானின் இரண்டாவது அதிக வாக்குகள்  பெற்ற கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. இப்படி ஒரு அந்தஸ்தை அக்கட்சி பெற்றதும், அடுத்த முறை கண்டிப்பாக அவர்களின் கட்சி வெற்றிப்பாதையை கடக்கும் என்று பல்வேறு தரப்பினர்களால் சொல்லப்பட்டது. அதை உண்மையாக்கும் வகையில், தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட வரையில் முன்னிலையில் இருக்கிறது இவரது கட்சி.  
 

imran khan


இம்ரான் கான் இந்த நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது என்ன என்றால், முதலில் அவர் ஒரு நடைமுறைவாதியாக இருப்பதுதான். மேலும் பாகிஸ்தானில் உள்ள அனைத்து கட்சிகளும் மதவாதத்தையும், தீவிரவாத்தையும் மட்டும் பிரச்சார யுக்திகளாக பயன்படுத்தியபோது. இம்ரான் பாகிஸ்தான் மக்களுக்கு சராசரி வெறுப்பாக இருக்கும் ஊழல், வறுமை, சுகாதாரம், கல்வி இவை அனைத்தையும் பற்றி பிரச்சாரம் செய்தார். பாகிஸ்தான் மக்கள் எதிர்பார்த்த வகையிலேயே தன்னுடைய பிரச்சாரத்தை முன் வைத்தார். புதிய பாகிஸ்தானை உருவாக்குவேன் என்று ஒவ்வொருவர் மனதிலும் ஆணி அடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். மேலும், இம்ரான் கானின் இந்த வெற்றிக்கு முக்கியமாக இருந்தது பாகிஸ்தானின் உளவுத்துறையும், இராணுவமும்தான் என்கின்றனர்.
 

பாக். நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகளின்போது இழுபறிகளுக்கு பின்னர் பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான் கான், அரசு ஊழியர்களின் ஆடம்பர செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இது பாக். மக்களை கவர்ந்தது. பின்னர், ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் என்றார். நான் மோடியுடன் பேச தயாரக இருக்கிறேன் என்றும் கூறினார். தற்போது யாரும் எதிர்பாராத வகையில் அபிநந்தனை உடனடியாக அதிலும் இரண்டே நாட்களில் இந்தியாவிடம் ஒப்படைத்தது பலருக்கும் ஆச்சரியம்தான். இந்திய மக்களும் பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று தங்களின் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்,  அந்நாட்டு அப்படியே. உலகமே வியக்கும் அளவிற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பிரதமர் எந்த வெறுப்பும் இன்றி இந்திய வீரரை அனுப்பியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம், பாகிஸ்தானியர்கள் விரும்பியபடி அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்கிறதா என்று...