சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாக பரவியதால், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரனையும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ். மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் ஆகியோரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தது தமிழக அரசு. நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என ஆய்வு செய்த இந்த அதிகாரிகள், கரோனா பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், சுகாதாரத் துறையினருக்குத் தொடர்ந்து வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள ஐசோலேசன் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார்டை ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி உதயசந்திரன். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உணவு, சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து விசாரித்துள்ளார். நன்றாக கவனிக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடமும் விசாரித்தபோதும் தாசில்தார் ராஜேந்திரன் சரியாக வழிநடுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அப்போது தாசில்தார் ராஜேந்திரன் எங்கே எனக் கேட்டுள்ளார் சிறப்பு அதிகாரி உதயசந்திரன். அவர் அலுவலகத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தாசில்தார் ராஜேந்திரனை பாராட்டிய சிறப்பு அதிகாரி உதயசந்திரன், ஒர்க்லோடு அதிகமாக இருப்பதால் உதவிக்காக இரண்டு டெப்டி தாசில்தார்களை வைத்துக்கொள்ளுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பியவர்களிடம் விசாரித்தபோது, “சத்தான உணவுகள் கொடுக்கிறார்கள். தொடர்ந்து தாசில்தார் எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்பார். சிகிச்சையில் ஏதேனும் குறைபாடு இருக்கா, உணவு பிடித்திருக்கிறதா எனக் கேட்பார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டோம். இப்போதும் போன் போட்டு, மருத்துவர்கள் சொன்னதை பாலோப் பண்ணுங்க, மருத்துவ உதவி தேவைப்பட்டால் போன் பண்ணுங்கன்னு சொல்லுவார்'' என்றனர்.
சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது? என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது? என தாசில்தார் ராஜேந்திரனிடம் கேட்டோம்.
''இந்த மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெஸ்ட் செய்கிறார்கள். ரிசல்ட்டில் பாசிட்டிவ் என வந்தால், மருத்துவமனையில் உள்ள ஐசோலேசனில் 3 நாள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 நாள் சிகிச்சை முடிந்த பின்னர் அருகில் உள்ள நர்சிங் ஹாஸ்டலில் உள்ள கரோனா கேர் சென்டரில் 7 நாள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு இடமில்லை என்றால் சேலையூர் சாலையில் உள்ள பாரத் கல்லூரியில் கரோனா கேர் சென்டர் உள்ளது. அங்கே தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்த பின்னர் ஹவுஸ் குவாரன்டைனில் 7 நாள் தனி அறையில் இருக்க வேண்டும் என்ற போதிய மருத்துவ அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைப்போம். தொடர்ந்து அவர்களிடம் நாங்கள் விசாரித்துக்கொண்டே இருப்போம். எங்களிடம் சிசிச்சை முடிந்தவுடன் நாங்களே தனி வேன் வைத்து அவரவர் வீட்டுக்கு கொண்டுவிடுவோம். 108 ஆம்புலன்ஸ் வழக்கமான பணிக்குச் சென்றுள்ளதால், தனியார் வேன் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
சிகிச்சை பெறுகிறவர்களுக்கு உணவு தனியார் கேட்டரிங் மூலம் செய்து வருகிறோம். முதலில் புதினா சாதம், பூண்டு சாதம் எனக் கொடுத்தோம், அது பற்றவில்லை என்றார்கள். இதையடுத்து மதியத்திற்கு முட்டை, வாழைப்பழத்துடன் முழு சாப்பாடு. காலை 6 மணிக்கு பால். 11 மணிக்கு டீ மற்றும் பிஸ்கட் அல்லது பிரெட். காலை டிபன் இட்லி, தோசை, சப்பாத்தி என அவர்கள் விருப்பப்பட்டது. மாலை நாலரை மணிக்கு பூண்டு பால் அல்லது மசாலா பால் அதனுடன் வேர்கடலை, காராமணி, பச்சைப் பயிறு போன்ற ஏதேனும் ஒரு பயிறு வகைகள் கொடுக்கப்படுகிறது. இரவு இட்லி, தோசை என சிகிச்சை முடியும் வரை கொடுக்கிறோம். சிகிச்சை முடிந்து செல்பவர்களிடம் இதேபோன்று சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், முகக் கவசம் அணியுங்கள் என அறிவுறுத்துகிறோம்''.
செங்கல்பட்டு தாலுகாவில் உள்ளவர்கள் தங்களுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என சந்தேகம் வந்தால் யாரை தொடர்புகொள்ள வேண்டும்?
நேராக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து டெஸ்ட் எடுக்கலாம். அருகில் உள்ள சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் உரிய வழிமுறைகளைச் சொல்வார்கள். அரசு மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தால் மட்டுமே ரிசல்ட் வரும்வரை நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் கொடுக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் கொடுப்பதில்லை.
செங்கல்பட்டு நகரில் உள்ள நத்தம் நடுத்தெருவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி எனத் தடை செய்யவில்லை, கிருமி நாசினி தெளிக்கவில்லை என்று அப்பகுதியினர் சொல்கிறார்களே என்றதற்கு, அந்தப் பகுதி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி உடனே சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்றார் உறுதியாக.