பேரரசு... 2005, 2006 ஆண்டுகளில் பேக் டு பேக் கமர்சியல் வெற்றிப் படங்கள் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை மசாலா நெடியில் தும்ம வைத்தவர். வசனங்களில், பாடல்களில், தன் படங்களில் இவர் கொடுக்கும் கேமியோ தோற்றங்களில் அந்தக் கால டி.ஆரை நினைவுபடுத்தியவர். விஜயுடன் இரண்டு சூப்பர்ஹிட் படங்கள், அஜித்துடன் ஒரு ஹிட் படம், விஜயகாந்த் அரசியலில் நுழைந்த பின் வந்த படம் என அப்போது லைம் லைட்டில் இருந்த இயக்குனர். அவரை சந்தித்து, ரிலாக்ஸாக பல விஷயங்கள் பேசினோம். அதில், விஜயகாந்த் குறித்தும் அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேரரசு பகிர்ந்தவை...
"நடிகர்களில் விஜயகாந்த் என்றால் எளிமை. அவரை தூரத்தில் பார்க்கும்போதுதான் நடிகர்னு பாப்போம். நெருங்கிட்டா அவர் நடிகரில்ல, நல்ல மனிதர். மக்களிடம் நெருங்கி உரிமையாகப் பழகுபவர். 'தருமபுரி' ஷூட்டிங் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. ஓப்பனிங் சாங் எடுக்கப்போறோம். விஜயகாந்த் சார் வருகிறார் என்றதும் பயங்கரமான கூட்டம் கூடிருச்சு. அவர் ஸ்பாட்டுக்கு வந்ததும் மக்கள் இன்னும் உற்சாகமாகிட்டாங்க. நாங்க, டீம்ல எல்லோரும் மக்களை கன்ட்ரோல் பண்ண முயற்சி பண்றோம். இருந்தாலும் ஆர்வத்துல ஒரு சிலர் நெருங்கி வர்றாங்க. எங்களால ஷூட்டிங் நடத்த முடியல.
விஜயகாந்த் சார், இதை பார்த்துட்டு அவரே நேரடியா இறங்கினார். மக்கள்கிட்ட உரிமையா போய், "ஏய்... கொஞ்சம் இருங்க... நாங்க இங்க வேலை பார்க்க வேணாமா? ஏய் ப்ளூ சட்ட, அமைதியா நில்லு, தள்ளிப்போ"னு இவர் பேசவும் மக்கள் அப்படியே கட்டுப்பட்டாங்க. வேறு எந்த நடிகர் இப்படி பேசியிருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. ஆனா, இவரோட கம்பீரம், உரிமையாக அன்பாகப் பேசும் தன்மை, மக்களை கட்டுப்படுத்துச்சு. மற்ற நடிகர்கள்னா நாங்க அவுங்களை சுற்றி நின்னு காப்பாத்துவோம். ஆனா, இவர் எங்களை காப்பாத்துனாரு. அப்படி ஒரு தோரணை. ரொம்ப இயல்பானவர், எதார்த்தமானவர்.
அவருக்கு நடிக்கத்தெரியாது. கோபம்னா கோபம், ஜாலியா இருந்தா முழுசா ஜாலியா இருப்பார். எனக்கு அப்போவே சந்தேகம், இப்படி இருக்காரே இவரு அரசியலுக்கு சரிப்பட்டு வருவாரா? அரசியல்னா அதுக்குன்னு சில குணங்கள் தேவை. குணத்தை மாத்திக்கணும், மாத்தி மாத்தி பேசணும். இவருக்கு அதெல்லாம் வராதேனு தோனும். அந்த அளவுக்கு உள்ள இருக்கிறதை அப்படியே பேசுறவரு. ஆனா, அரசியலுக்கு வந்தார், ஜெயிச்சார். இன்றைக்கு எல்லோரும் பேசுறாங்களே 'வெற்றிடம், வெற்றிடம்'னு... கலைஞர் மறைந்ததாலோ, ஜெயலலிதா அம்மா இறந்ததாலோ வெற்றிடம் ஏற்படல. உண்மையா, விஜயகாந்த் சாருக்கு உடம்பு முடியாதனாலதான் வெற்றிடம் ஏற்பட்டிருக்கு. இவர் சட்டசபைல நாக்க துருத்திக்கிட்டு நின்னாரு இல்லையா, அந்த எனர்ஜியோட இன்னைக்கு இருந்தா, பல பேர் கட்சி ஆரம்பிச்சுருக்க மாட்டாங்க."
முழு வீடியோ பேட்டி...