Skip to main content

எடப்பாடியை ஏற்க மாட்டோம்! கூட்டணி ஆட்சிக்கு பாஜக நிர்பந்தம்! -எக்ஸ்ட்ரா லக்கேஜ் என பதில் விமர்சனம்!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020
EPS

 

 

2021-ல் இந்தியாவில் நடக்கவிருக்கும் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கொள்கை ரீதியாக சவால்களை ஏற்படுத்துவது தமிழ்நாடும், மேற்கு வங்கமும்தான். அதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் அதிக கவனம் செலுத்துகிறது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. குறிப்பாக, தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு அதிகார மிரட்டலை காட்டி கூட்டணியின் தலைமையை கைப்பற்றி அதன் மூலம், இரட்டை இலக்க இடங்களுடனான தேர்தல் வெற்றியை ருசிக்கத் திட்டமிடுகிறது. அதனால்தான் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதனை ஏற்க மறுக்கும் விதமாக பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.

 

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரையில், மோடியின் நண்பராக இருந்தாலும் போயஸ் தோட்டத்தில் விருந்து அளிக்கப்பட்டபோதும் மோடியின் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. ஜெயலலிதா மறைவையடுத்து, டெல்லியின் கைப்பாவையாக மாறிவிட்ட எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க., 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. அந்தக் கூட்டணி தொடர்கிறது.

 

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், "கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு பிறகு அறிவிக்க வேண்டிய விஷயம். தேர்தல் நெருங்கும்போது இதனை கட்சி தலைமை முடிவு செய்யும். 2021-ல் பா.ஜ.க. அங்கம் வகிக்கக்கூடிய ஆட்சி அமையும்'' என்றார். பா.ஜ.கவின் சீனியர் தலைவரின் இந்த கருத்து, அ.தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதுடன் அ.தி.மு.க. தலைவர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

 

bjp

 

எடப்பாடி கேட்டுக்கொண்டதற்கிணங்க உடனடியாக அ.திமு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இதனை மறுத்து, "தேசிய கட்சியோ மாநில கட்சியோ எங்களுடன் கூட்டணிக்கு வரும்போது நாங்கள் அறிவித்துள்ள முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள்தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும்'' என்றார் அதிரடியாக.

 

இந்த நிலையில், எடப்பாடியை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், "அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடிக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்'' என்றார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறீர்களா என அவரிடம் கேட்டதற்கு, "அதான் தெளிவாக சொல்லி விட்டேனே'' எனச் சொல்லி, நேரடியாக ஏற்க மறுத்தார் முருகன்.

 

இதற்கிடையே பா.ஜ.க.வின் துணை தலைவர் வானதி சீனிவாசனும், "இன்றைக்கு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அ.தி.மு.க. தலைமையில் இருக்கிறது. எதிர்காலத்தில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமையலாம். அதனால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஜனவரிக்கு பிறகே உறுதி செய்யப்படும்'' என்றதுடன், கூட்டணி மாற்றம் பற்றியும் தெரிவித்தார்.

 

இப்படி பா.ஜ.க. தலைவர்கள், அ.தி.மு.க.வின் அரசியல் முடிவுகளுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருவது அ.தி.மு.க. கூட்டணியின் வலிமையை குறைப்பதாக இருக்கிறது என்கிற ரீதியில் எடப்பாடியிடம் தெரிவித்து வருகிறார்கள் மூத்த அமைச்சர்கள்.

 

admk

 

இந்த நிலையில், பா.ஜ.க. தலைவர்களின் கருத்துகள் குறித்து அ.தி.மு.க.வின் வழிகாட்டு குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகரனிடம் கேட்டபோது, "துணை ஒழுங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெளிவுபடுத்தியிருப்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வர் வேட்பாளர். இதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை. அந்த வகையில் அ.தி.மு.க. வின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடிதான் கூட்டணிக்கும் முதல்வர் வேட்பாளர்'' என்கிறார் உறுதியாக.

 

அ.தி.மு.க. கூட்டணிக்குள் இருந்துகொண்டே சர்ச்சைகளை பா.ஜ.க. உருவாக்குவது குறித்து அக்கட்சியின் மாநில பொறுப்பாளர்களிடம் விசாரித்தபோது, "இந்த முறை மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியையும், தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி ஆட்சியையும் உருவாக்குவதே தேசிய தலைமையின் திட்டம். அதற்கேற்ப சில பல காய்களை நகர்த்தி வைத்திருக்கிறார்கள். தவிர, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு ஊழல் இமேஜ் மக்களிடம் இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. கொடியையும், மோடியின் படத்தையும் போட்டு ஓட்டு கேட்டால் ஓட்டு விழாதுன்னு சொல்லி பல இடங்களில் அதனை தவிர்த்தார் எடப்பாடி பழனிசாமி. அதே போல, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கும் பட்சத்தில் எடப்பாடிதான் முதல்வர் என நாங்கள் பிரச்சாரம் செய்தால் எடப்பாடியை விரும்பாத வாக்குகள் எங்களுக்கு கிடைக்காமல் போனால் என்ன செய்வது? அதான், எடப்பாடியை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் தயக்கம். மேலும், கூட்டணி ஆட்சியை அமைக்க திட்டமிடுவதால் முதல்வர் வேட்பாளர் கான்செப்ட் தேவையில்லை என்பதும் பா.ஜ.க.வின் நோக்கம்'' என்கிறார்கள்.

 

அ.தி.மு.க. மூத்த தலைவர்களோ, "அ.தி.மு.க. கூட்டணியில் அதிக சீட்டுகளை பெறுவதற்காக இப்படிப்பட்ட தந்திரங்களை கையாளுகிறது பா.ஜ.க... கூட்டணியில் அவர்கள் இருப்பது அ.தி.மு.க.வுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ். அவர்கள் வெளியேறுவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்'' என்கிறார்கள். அது அத்தனை எளிதானதா என்பதைத் தேர்தல் களம் சொல்லும்.

 

 

சார்ந்த செய்திகள்