மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
நெல்லையில் இன்று மாலை பொதுக்கூட்டம் வைத்திருக்கிறோம். ஏழு தமிழர் விடுதலையை தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும், கஜா புயலுக்கு உரிய இழப்பீடை தமிழக அரசு வழங்கவில்லை என்பதை கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
ஏழு தமிழர் பேர் விடுதலையை இன்னும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்கள். அரசியல் சாசனத்திற்கோ, சட்டத்திற்கோ அப்பாற்ப்பட்டவர்கள் அல்ல. ஆனால் சட்டங்களை மதிக்காமல் 7 பேர் விடுதலையை தள்ளி வைக்கலாம் என்று செயல்படுவது சட்ட விரோதமானது என்பதுதான் மே 17 இயக்கத்தின் கருத்து.
7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை செயல்படுத்துவதுதான் அவரது வேலை. அதனை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. அவர் காலதாமதம் செய்வது நீதியை மறுக்கும் செயல். சட்டத்தை மீறும் செயல். 7 பேரை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. மாநிலத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள். மாநில சட்டசபை தீர்மானத்தை மறுக்கின்ற அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.
இப்படி இருக்கும் சூழலில் 7 பேரின் விடுதலையை தடுத்து வைத்திருக்கிறார். இது சட்ட விரோதமானது. இரண்டாவது அவர் நியமனம் செய்யப்பட்டவர். தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இந்திய சட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனம் செய்யப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்டு நடைமுறைப்படுத்தக் கூடிய கடமை இருக்கிறது. அந்த கடமையை தவறுகின்ற வேலையை ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏழு பேர் விடுதலையை தடுத்து வைத்திருப்பது மோசமான ஒன்று.
அதுமட்டுமில்லாமல் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவையெல்லாம் நேர்மையற்ற, சட்டத்திற்கு புறம்பான செயல் என்று மே 17 இயக்கம் கண்டிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.