நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஜோதிடம், ஆன்மீகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தனக்கு நெருக்கமான ஒருவரின் ஜோதிட அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
ஜோதிடம், நாடி ஜோதிடம், மறுபிறவி தொடர்பான ஓர் உண்மைச்சம்பவம் குறித்து உங்களுக்குக் கூறுகிறேன். என்னுடைய காணொளிகளைப் பார்த்துவிட்டு, 48 வயது மதிக்கத்தக்க நல்ல வசதியான ஒருவர் என்னைச் சந்திக்க ஆடி காரில் வந்தார். அவருடன் இன்னும் இருவர் வந்திருந்தனர். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில், அவர் நான் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன் என்றார். பின், அவருடைய அலுவலகத்திற்குச் சென்று அவரை ஒருநாள் சந்தித்தேன். அப்போது அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் பற்றிக் கூறினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இருந்த பாலஜோதிடர் வித்வான் லக்ஷ்மணன் இவருக்கு நல்ல பழக்கம் என்றார். அவர் வீட்டிற்குப் பக்கத்தில்தான் இவர்களுடைய குடும்பம் குடியிருந்துள்ளது. வித்வான் லக்ஷ்மணன் இவருக்கு ஜோதிடமெல்லாம்கூட சொல்லியிருக்கிறார். இளம் வயது என்பதால் இவருக்கு ஜோதிடத்தில் எல்லாம் அப்போது நம்பிக்கை இல்லை. பின், இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
வித்வான் லக்ஷ்மணனுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்கிறார். அவர் அழைப்பிதழை வாங்கிவிட்டு, என்னடா ஒரு வார்த்தைகூட சொல்லல... பொண்ணு எந்த ஊரு... அவங்க ஜாதகம் என்ன என்றெல்லாம் கேட்டிருக்கிறார். நான் ஜாதகத்தைக் கொண்டுவந்து தருகிறேன் என வித்வான் லக்ஷ்மணனிடம் கூறிவிட்டு வந்த இவர், மறுநாள் சென்று ஜாதகத்தைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்த வித்வான் லக்ஷ்மணனுக்கு அதிர்ச்சி. டேய் இந்தப் பொண்ணுகூட ரெண்டு மூனு நாள்கூட வாழமாட்டடா.. எதுக்குடா இந்தப் பத்திரிகை... இந்த கல்யாணத்தை நிறுத்திருடா என்கிறார். இல்லை இது என் அப்பா ஏற்பாடு செய்த கல்யாணம். இதை நிறுத்தினால் அவர் மனமுடைந்துவிடுவார் என்றுவிடுகிறார். சரி உன் தலையெழுத்து அவ்வளவுதான் எனக் கூறிவிட்டார் வித்வான் லக்ஷ்மணன். திட்டமிட்டபடி திருமணம் நடக்கிறது.
திருமணம் நடந்து சரியாக மூன்றாவது நாள், நான் குளிக்கும்போது குளியலறை கதவு ஓட்டை வெளியாக உங்கள் அப்பா பார்த்தார் என்று அவன் மனைவி வந்து புகார் கூறுகிறாள். அவனுக்குப் பேரதிர்ச்சி. தன் தந்தை அப்படிப்பட்டவர் இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும். அவள் கூறியதை இவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கணவன் பொருட்படுத்தவில்லை என்றவுடன் நான் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டு ஒரு வாரம் கழித்து வருகிறேன் எனக் கூறுகிறாள். இவனும் சரி என்கிறான். அவள் கிளம்பிச் சென்றதும் வித்வான் லக்ஷ்மணனிடம் சென்று நடந்ததைக் கூறுகிறான். அதற்கு அவர், நான்தான் அன்னைக்கே சொன்னேன்லடா... மூனு நாளைக்குமேல இவகூட நீ வாழமாட்டன்னு... இப்ப போனவா திரும்பி வரமாட்டா... நீயும் போய் கூப்பிடாத... இல்லனா அவளால நீ நிறைய பிரச்சனைகளை அனுபவிப்ப எனச் சொல்கிறார். இவரும் பெரிய பணக்காரர் என்பதால் அந்தப் பெண்ணை தேடி செல்லவே இல்லை. இவருக்கு பழங்காலத்து பொருட்களை ஏலத்தில் தேடித்தேடி எடுத்து வீட்டில் சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கும். சில காலம் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்தத் திருமணமும் தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது மூன்றாவதாகத் திருமணம் செய்த பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த சந்திப்பில் என்னிடம் மறுபிறவி பார்க்க வேண்டும். எங்கு சென்று பார்க்கலாம் என்று கேட்டார். அமெரிக்காவில் இருவர் இருக்கின்றனர். அவர்களை வேண்டுமானால் சென்று சந்திக்கலாம். ஆனால், ரொம்ப செலவாகும் என்றேன். அவரும் சரி என்றார். கரோனா சூழ்நிலை மாறி இயல்புநிலை திரும்பவும் செல்லலாம் என்று அவருடன் கூறினேன். அவர் உடனே ஏதாவது ஜோதிடம் பார்க்க வேண்டும் என்றார். பின், இங்குள்ள ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றேன். இவருடைய வாழ்க்கை பற்றி முழு விவரத்தையும் அவர் கூறிவிட்டார். அவர் கூறியதைக் கேட்டு இவர் ஆச்சரியப்பட்டார். அடுத்து நாடி ஜோதிடம் பார்த்தோம். அவரும் எல்லா விஷயங்களையும் அப்படியே கூறினார். மூன்றாவது மனைவியுடன்தான் நீ கடைசி காலம் வரைக்கும் வாழ முடியும் என்று அவருடைய திருமண விஷயங்கள்வரை அனைத்தையும் துல்லியமாகக் கூறினார்.
நான் இல்லாமல் அவர் மட்டும் தனியாகச் சென்று பன்னிரெண்டாம் கண்டம் பார்த்துள்ளார். அதில், இவர் சேரநாட்டில் ஒரு குறுநில மன்னனாக இருந்தாக அந்த ஜோதிடர் கூறியுள்ளார். பெண்கள் விஷயத்தில் கடந்த பிறவியில் நிறைய சேட்டைகள் செய்துள்ளார். கடந்த பிறவியில் நீ குறுநில மன்னனாக இருந்த காரணத்தால் இந்தப் பிறவியிலும் உன் வீட்டை அரண்மனைபோல அலங்கரித்திருப்பாய் என அவர் கூறினாராம். இவர் வீடு ஏறக்குறைய அப்படித்தான் இருக்கும். நிறைய பழங்கால பொருட்கள் அவர் வீட்டில் இருக்கும். சமீபத்தில் நடந்த இந்த விஷயம் எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது.