2001 முதல் 2014 வரை குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த மோடி, அக்காலகட்டத்தில் முன்வைத்த ஒரு முழக்கம் 'துடிப்பான குஜராத்'. குஜராத்தை இந்தியாவின் முன்மாதிரியான மாநிலமாக மாற்றுவோம் என முழங்கிய மோடி, 13 ஆண்டுகாலம் அம்மாநில முதல்வராகத் தனது பணியை முடித்து இந்தியாவின் பிரதமராக 2014 ஆம் ஆண்டு பதவியேற்றார். 2014 -ல் வீசியதாகச் சொல்லப்படும் மோடி அலையில், பாஜகவினரால் அதிகளவில் முன்வைக்கப்பட்ட ஒரு விஷயம் 'குஜராத் மாடல்'. இந்தியாவின் சிறந்த மாநிலம் குஜராத் என்றும், அம்மாநிலத்தில் சிறப்பான நிர்வாகத்தைக் கொடுத்தவர் மோடி என்றும் ஒரு பிம்பம் இப்பிரச்சாரத்தில் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அண்மைக்காலமாக மெல்ல விரிசல் விட்டுவந்த 'குஜராத் மாடல்' என்ற இந்த பிம்பம் தற்போதைய கரோனா விவகாரத்தால் முற்றிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ், கடந்த சில வாரங்களாகப் பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களில் இவ்வைரஸின் பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதில் வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை இவற்றைக் கடந்து மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மை, மருந்து தட்டுப்பாடு, இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய போதிய வசதியின்மை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, மருந்துகளின் கள்ளச்சந்தை பெருக்கம் எனத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாடல் மாநிலம் என அழைக்கப்பட்ட குஜராத் மாநிலம்.
அம்மாநிலத்தில் நேற்றைய புள்ளிவிவரங்களின்படி, 24 மணிநேரத்தில் 8,152 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகளும், 81 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இது, அம்மாநிலம் இதுவரை கண்டிராத உச்சபட்ச பாதிப்பாகும். பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், செய்வதறியாது திணறிப்போய் நிற்கிறது குஜராத் மாநிலம். கரோனாவால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இந்தச் சூழ்நிலையைக் கையாள போதிய வசதி இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், களநிலவரமோ வேறொரு வகையான தகவலை நாட்டிற்குத் தந்துகொண்டிருக்கிறது.
கரோனா பாதித்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நோக்கி வரும் மக்களை அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கான போதிய படுக்கை வசதி கூட இல்லாத சூழலிலேயே குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் இருக்கின்றன. அப்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ உபகரண தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை எனப் பல இடர்பாடுகளைச் சந்தித்தே நோயாளிகள் சிகிச்சை பெறவேண்டியிருக்கிறது. போதிய வசதியின்மையால் பல மருத்துவமனைகளில் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளுக்கு ஒன்றாக சிகிச்சையளிக்கும் சூழலும், மருத்துவமனை வராண்டா தரையில் நோயாளிகளைப் படுக்க வைத்து சிகிச்சையளிக்கும் சூழலும் நிலவிவருகிறது.
மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதென்பது இவ்வளவு கடினமானதென்றால், ஆம்புலன்ஸை பிடித்து மருத்துவமனைக்குச் செல்வதென்பதே பல பகுதிகளில் இதனைவிடக் கடினமாக இருக்கின்றது. பல இடங்களில் குறைவான ஆம்புலன்ஸ்கள் இருப்பதனாலும், சில இடங்களில் ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாலும் ஆம்புலன்ஸை பிடிப்பதே குதிரைக் கொம்பாகிவிடுகிறது இதுபோன்ற இடங்களில். உதவி எண்ணுக்கு அழைத்துவிட்டு ஆம்புலன்ஸுக்காக மணிக்கணக்கில் காத்திருப்பது, மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பல மணிநேர காத்திருப்பது என அல்லல்படும் மக்கள், வைரஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்தினை பெறவும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
கடந்த வாரம் அம்மாநிலத்தில் ஏற்பட்ட ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு காரணமாக, ஒரே நாளில் இம்மருந்தினை வாங்க நோயாளிகளின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளின் முன்பு கூடியது மிகப்பெரிய பேசுபொருளானது. கடந்த மாதமே குஜராத் மாநில உயர்நீதிமன்றம் அம்மாநில அரசிடம், கரோனா தடுப்பு பணிகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மாநில அரசோ, நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், வைரஸ் பரவலைக் கையாள போதிய வசதிகள் உள்ளதாகவும் தொடர்ந்து கூறிவந்தது. ஆனால், மக்களோ அம்புலன்ஸுக்கும், மருத்துவமனை படுக்கைக்கும், மருந்துகளுக்கும் காத்திருக்கும் அவலமே அங்கு நிலவி வருவதாக உள்ளூர்வாசிகள் குமுறுகின்றனர். இப்படி ஒவ்வொரு காத்திருப்பும் மக்களின் உயிர்களைப் பறித்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த காத்திருப்புகளை எல்லாம் விட மக்கள் மனதை மேலும் ரணமாக்கியிருக்கக்கூடிய மற்றொரு காத்திருப்பு, உடல் தகனங்களுக்கான காத்திருப்பு. கரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் இறந்த தங்களது உறவினர்களின் உடலுக்காக மருத்துவமனையில் காத்திருந்து அவற்றைப் பெறும் மக்கள், அந்த உடல்களை எரியூட்டுவதற்கான தகன உலைகளைக் கண்டறிவதே மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அம்மாநிலத்தின் பல தகன உலைகள் தொடர்ச்சியாக செயல்பட்டு உலையின் இரும்பு அடைப்புகள் உருகும் நிலைக்குச் சென்றுள்ளன. தகன உலைக்காகப் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்ற சூழலில், பலர் திறந்த மைதானங்களில் வைத்தே உடல்களை எரியூட்டும் சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகின்றன. அதேபோல, அம்மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ மற்றும் பார்சி மக்களும் உடலைப் புதைக்க முடியாத சூழலில் உடலைத் தகனம் செய்ய அம்மத சபைகள் அனுமதியளித்துள்ளன.
இப்படி மக்கள் பல்வேறு இன்னல்கள் சந்தித்துக் கொண்டிருக்கையில் கரோனா பாதிப்பைப் பயன்படுத்தி பல்வேறு வகையான ஏமாற்று மற்றும் மோசடி வேலைகளும் அம்மாநிலத்தில் நடந்தேறி வருகின்றன. அகமதாபாத்தில், கரோனாவால் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திலிருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள தங்க வளையல்களைத் திருடிய அரசு மருத்துவமனையின் ஒப்பந்த ஊழியரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல, 800 ரூபாய் மதிப்புள்ள ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்து குஜராத்தின் கள்ளச்சந்தைகளில் ரூ.12,000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில காவல்துறை சிலரைக் கைதும் செய்துள்ளது. திருட்டு, கள்ளச்சந்தை இவற்றையெல்லாம் கடந்து போலி கரோனா சோதனைகளும் அம்மாநிலத்தில் நடைபெறுவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில், அகமதாபாத்தின் கோடாசர் பகுதியில் 3,000 க்கும் மேற்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்திய ஒரு ஆய்வகத்தை, அங்குச் சோதனை செய்துகொண்டவர்கள் புகார்களின் அடிப்படையில் அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அந்த ஆய்வகத்தில் ஆன்டிஜென் சோதனைகளை நடத்துவதற்கு உபகரணங்கள் எதுவுமே இல்லாததும், மக்களுக்கு அந்த ஆய்வகத்தினர் போலியான சோதனை முடிவுகளைத் தெரிவித்து, பணம் சம்பாதித்து வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.
இப்படி, குஜராத்தில் மக்கள் கரோனாவுடனும், அடிப்படை வசதியின்மையுடனும் போராடிக்கொண்டிருக்கையில், இவ்வாரம் நடைபெற்ற உயர்நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகளின் கேள்வியை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக அவசர அவசரமாக டி.ஆர்.டி.ஓ உதவியுடன் 900 படுக்கை வசதி ஏற்பாடு செய்வது, ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்வது, ரெம்டெசிவிர் மருந்து இருப்பை உறுதி செய்வது எனக் கடந்த வாரம் திடீர் வேகம் காட்டியது குஜராத் மாநில அரசு. நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிக்க மருந்துகள், ஊசி மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத மருத்துவ வல்லுநர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்கூறி அகமதாபாத் மருத்துவச் சங்கம் குஜராத்தின் முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. பிரதமரால் சிலாகித்துக் கூறப்பட்டு வந்த மாடல் மாநிலமான குஜராத்தின் வளர்ச்சி எனும் பிம்பத்தை கரோனா இன்று ஆட்டம்காண வைத்துள்ளது.