பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள முடிவு, மீண்டும் பொதுவெளியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த மாநிலமும் எதிர்நோக்கிய ஒரு விவகாரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் சறுக்கி இருப்பதாக அவர் மீது கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கரோனா தொற்று அபாயம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடத்தி முடித்திருக்க வேண்டிய பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து மூன்று முறை தள்ளி வைக்கப்பட்ட இத்தேர்வை, ஜூன் 15 முதல் 25- ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதற்கான அனுமதிச் சீட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வும் தேர்வைத் தள்ளி வைக்கக்கோரி வற்புறுத்தின.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், 9 லட்சம் மாணவர்களின் உயிருடன் விளையாடலாமா? மாணவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பது யார்? எனத் தமிழக அரசுக்குக் காட்டமான வினாக்களை எழுப்பியது. வழக்கு விசாரணையை மீண்டும் ஜூன் 11- க்கு ஒத்திவைத்தது, உயர்நீதிமன்றம்.
தேர்வை ரத்து செய்யக்கோரி, தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் ஜூன் 10இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தன. நாலாபுறமும் நெருக்கடிகள் முற்றியதை அடுத்து, ஜூன் 9- ஆம் தேதி, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 11, 12- ஆம் வகுப்புகளுக்கு விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அரசின் முடிவு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்களிடம் பேசினோம். மாணவர் நலன் சார்ந்த ஒரு விவகாரத்தில் அரசு சரியான முடிவெடுக்கத் தவறி விட்டதாகக் கூறினார்கள். பொதுத்தேர்வு ரத்து முடிவின் தாக்கம், வரும் கல்வி ஆண்டிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள்.
சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரபாகரன் கூறுகையில், ''பத்தாம் வகுப்புக்குத் தேர்வு நடத்தப்படுமா? இல்லையா? என்பதில் தமிழக அரசு ஆரம்பத்திலேயே தெளிவான முடிவை எடுத்திருக்கலாம். தேர்வு ரத்து செய்திருப்பது தாமதமான முடிவு. தவறான முடிவும்கூட. இதனால் மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் இருந்து 80 சதவீதமும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. என்னவெனில், முந்தைய இரு தேர்வுகளிலும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, அரசு அறிவித்தபடி கணக்கிட்டு மதிப்பெண் வழங்கியும் 30க்கு மேல் மதிப்பெண் பெறவில்லை எனில், அந்த மாணவனுக்கு மதிப்பெண் சான்றிதழில் என்னவென்று குறிப்பிடுவது என்பதற்கு உரிய வழிகாட்டுதல்கள் இல்லை.
ஒருவேளை, பொதுத்தேர்வு நடத்தப்பட்டு இருந்தால், முந்தைய தேர்வுகளை சரியாக எழுதாத மாணவர்கள் பொதுத்தேர்வில் நன்றாக எழுதி அதிக மதிப்பெண் பெறவும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது அந்த வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. தேர்வை ரத்து செய்ததற்குப் பதிலாக, பள்ளிகளை எப்போது திறக்கிறார்களோ, அப்போது தேர்வு வைத்திருந்தால் வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும். பள்ளிகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திறக்கப்படுகிறது எனில், வரும் கல்வி ஆண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டால், செப்டம்பரில் காலாண்டுத் தேர்வு நடத்தப்படும். வரும் கல்வி ஆண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும்,'' என்றார்.
சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், ''தேர்வு ரத்து முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியாது. என் மகன் சூர்யா, இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முழுவீச்சில் தயாராகி இருந்தான். கடந்த காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் சுமாரான மதிப்பெண்களைத்தான் பெற்றிருந்தான். அதன்பிறகு அவனுக்கு டியூஷனை மாற்றினோம். ஏற்கனவே சிலமுறை பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், அந்தக் காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி படித்து வந்தான். ஜூன் 15ஆம் தேதி தேர்வு தொடங்கும் என்பதால் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்து முதல்வர் அறிவித்திருப்பது நிச்சயமாக ஏமாற்றமாக இருக்கிறது.
முழு ஆண்டுத்தேர்வு நடத்தி இருந்தால் 400க்கு மேல் மதிப்பெண் பெற முடியும் என்றும், அதன்மூலம் பிளஸ்-1இல் தான் விரும்பும் பாடப்பிரிவை எடுக்க முடிந்திருக்கும் என்றும் என் மகன் புலம்புகிறான். கரோனா தொற்றுப் பரவல் காரணமாகத்தான் தேர்வு ரத்து செய்யப்படுவதாகக் கருதினாலும்கூட, இப்போதும் சிறுவர்கள் தெருவில் முகக்கவசம்கூட இல்லாமல் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கூட்ட நெரிசலுடன்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. யதார்த்த நிலைமை இப்படி இருக்கும்போது நோய்த்தொற்று என்ற பெயரில், தமிழகத்தில் கல்வியிலும்கூட அரசியல் செய்கிறார்கள்,'' என்கிறார்.
சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராதா என்பவர், ''என் மகள் அரசுப்பள்ளியில் ஆங்கில வழியில் படித்து வருகிறாள். அவளுக்கு தமிழ்ப்பாடம் கடினமாக இருந்து வந்த நிலையில், பொதுத்தேர்வுக்காக கஷ்டப்பட்டு படித்து வந்தாள். தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் என் மகள் ரொம்பவே ஏமாற்றம் அடைந்திருக்கிறாள், ''என மகளின் உள்ளக்குமுறலைச் சொன்னார். ஆத்தூரைச் சேர்ந்த ஜமுனா, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை அடிக்கடி தள்ளி வைத்தபோதே எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. என்றாலும், ஜூன் 15ஆம் தேதி தேர்வு என்று சொன்னதால், அதற்காக என் மகன் ஆர்வத்துடன் தயாராகி வந்தான். இப்போது தேர்வு ரத்து செய்யப்பட்டதால், அடுத்து அவனுக்கு பிளஸ்-1இல் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது,'' என்றார். ஆசிரியர், பெற்றோர்களின் கருத்து இவ்வாறு இருக்கையில், தமிழக அரசுத்தேர்வுகள் இயக்கக முன்னாள் இயக்குநர் தேவராஜன், புதிய யோசனையையும் முன்வைத்தார்.
''பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். கரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் தேர்வு நடத்தாமல் இருப்பது நல்லதுதான். இன்றைய நிலையில், பத்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்துவது, முடிவுகளை வெளியிடுவது வரையிலான பணிகளுக்கு 12 நாள் போதுமானது. ஆகையால், எப்போது பள்ளிகளைத் திறந்தாலும் பத்தாம் வகுப்புக்கு ஒரு மாதம் புத்துணர்வுப் பயிற்சி அளித்துவிட்டு, அதன்பிறகு தேர்வு நடத்தலாம்.
பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகும் என்பதால், அடுத்தக் கல்வி ஆண்டிலும் தேர்வுகளை நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறது. அதனால், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்குக் காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வுகளைத் தவிர்த்துவிட்டு, பொதுத்தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்தலாம். அதாவது கல்லூரி செமஸ்டர் தேர்வு போல. அதற்கேற்ப பாடங்களை இரண்டு பகுதியாகப் பிரித்துக் நடத்திக் கொள்ளலாம். இரண்டு கட்டத் தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களின் சராசரியை எடுத்து, ஒரே மதிப்பெண் சான்றிதழகாக வழங்கலாம்.
அதேபோல், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது என்பது தவறான முடிவு. எனக்குத் தெரிந்து அத்தேர்வுகளில் ஆசிரியர்கள் பாரபட்சமாகத்தான் மதிப்பெண்களை வழங்குகின்றனர்,'' என்று புதிய யோசனையை முன்வைத்தார் தேவராஜன்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கப் பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரிடம் பேசினோம். ''தமிழக அரசின் முடிவு, மாணவர்களின் திறமையை எடைபோட முடியாத சூழலை உருவாக்கி இருக்கிறது. நீதிமன்றத்தை எதிர்கொள்ள முடியாமல் எடுக்கப்பட்ட முடிவு இது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் தயாராக இருந்த நிலையில் முதல்வர் இப்படி ஒரு முடிவை அறிவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.
பொதுத்தேர்வு என்று இருப்பதால்தான் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சமாவது வேலை செய்கின்றனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும்தான் லாபம். ஏற்கனவே, தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள்கள் என்பதை ஒரே தாளாக்கி, அதிலும் 80 மதிப்பெண்களுக்குதான் தேர்வு நடத்துகின்றனர். அகமதிப்பீட்டு மதிப்பெண் 20 கிடைத்து விடுகிறது. அதனால் மொழிப்பாடங்களில் தேர்ச்சிக்குத் தேவையான 15 மதிப்பெண்களைப் பெற மாணவன் படித்தால் போதுமானது.
அதிலும் கேள்விகளில் பிழையாக அச்சிட்டு, அதற்கும் போனஸ் மதிப்பெண் கொடுத்து விடும் போக்கும் உள்ளது. இப்படியான நிலையில் தேர்வு என்பதே இங்கே பெரிய ஏமாற்று வேலைதான். அந்த ஏமாற்று வேலைக்கு இன்னொரு பெரிய ஏமாற்றமான முடிவை அரசு எடுத்துள்ளது. இந்த முடிவால் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குதான் பின்னடைவு,'' என்றார் கே.ஆர்.நந்தகுமார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விவகாரத்தில் அரசு எடுத்த முடிவின் பின்னணியில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தம் முக்கியக் காரணம் என்றும், நீதிமன்றம் குட்டு வைத்ததால்தான் இப்படியொரு முடிவை எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி நாம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலையிடம் கேட்டோம்.
''கரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில்தான் ஜூன் 15- ஆம் தேதி முதல் பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு முன்வந்தது. ஆனால், நோய்த்தொற்று தாக்கம் குறையாததால் மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் சரியான முடிவை எடுத்திருக்கிறார். இதைப் பெற்றோரும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் தேர்வு ரத்து செய்யும் முடிவை எடுத்ததாகச் சொல்வதில் உண்மை இல்லை. ஜூலை மாதத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. அதைப்பற்றி எல்லாம் ஏன் தி.மு.க. கேள்வி எழுப்பவில்லை?
பள்ளிகள் திறக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 15 நாள்கள் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன்பின் பொதுத்தேர்வு நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்குள் இரண்டு மாத காலம் ஆகிவிடும். அப்படிச் செய்தால் அடுத்தக் கல்வி ஆண்டு முழுவதுமே பாதிப்பதோடு, பத்தாம் வகுப்பு மாணவர்கள் டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் இதர தொழிற்படிப்புகளில் சேர முடியாமல் போய்விடும் சிக்கலும் இருக்கிறது. இவற்றை எல்லாம் அரசு கவனத்தில் கொண்டதோடு, பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்தைக் கேட்டும், உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படியும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை அரசு எடுத்திருக்கிறது,'' என்கிறார் செம்மலை.