Skip to main content

பெண்கள் மூக்குத்தி போடாத வித்தியாசமான கிராமம்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு - அங்கிருந்து திருக்கோவிலூர் செல்ல பஸ்சுக்கு காத்திருந்தோம் அப்போது மூன்று பெண்கள் பேசிக்கொண்டது ''என்ன சரசு நல்லாயிருக்கியா பார்த்து ரொம்ப நாளாச்சு இது யாரு? மூக்கும் முழியுமா? லட்சணமா இருக்கா மூக்குத்தி போட்டா இன்னும் அழகா இருப்பா ஒன்னு வாங்கி போடவேண்டியதுதானே. அதுமாதிரி போடக்கூடாதுக்கா எங்க ஊர்ல பொறந்த பொண்ணுங்க மூக்குத்தி போடக்கூடத்துக்கா ஆனா வெளியூர்ல இருந்து இங்க ஊருக்கு வாக்கப்பட்டு (திருமணம் செய்துகொண்டு வருபவர்கள்) வர பொண்ணுங்க மூக்குத்தி போட்டுக்கலாம் இந்த ஊர்ல பொறந்த பொண்ணுங்க மூக்குக்குத்த  மாட்டாங்க'' என்று சொல்ல '' இதென்னடி அதிசயமா இருக்கு? என்ன காரணமாம்'' எனக் கேட்டார், ''அப்படி போட்டா சாமி குத்தமாயிடுமா அக்கா'' அப்படிப்பட்ட கிராமம் எங்கே  என்று அந்த பெண்களிடம் கேட்டுக்கொண்டு அங்கே புறப்பட்டோம்.
 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூரில் இருந்து மேற்கே திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ளது பல்லேரிபாளையம். இந்த ஊர்லதான் பிறந்த பெண்கள் மூக்குத்தி போடுவதில்லை. 
 

பிறந்த பெண்கள் மூக்குத்தி போடக்கூடாது என்பதற்கு என்ன காரணமென அங்கெ பிறந்த பிரமுகர்களையும் ஊர்மக்களையும் கேட்டபோது, ''இது இப்போது ஏற்பட்ட பழக்கமில்லீங்க... பலதலைமுறையாக உள்ளது. இதுதான் இங்குள்ள மரபு. இதற்கு காரணமாக ஒரு கதையை எங்கள் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.
 

Palleripalaiyam

அலமேலு, தேன்மொழி, சிவகாமி, கோபாலகிருஷ்ணன்


இந்த பகுதி பெரிய காடாக இருந்துள்ளது. இந்த பகுதிக்கு ஒரு கணவன் மனைவி அவங்களோட நான்கு பெண்பிள்ளைகளோட பிழைப்பு தேடி வந்தபோது, இந்த பகுதியில் உள்ள காட்டை கொஞ்சம் திருத்தி இங்கேயே தங்கிட முடியு செய்து காட்டை வெட்டி திருத்தும்போது, விளையாட்டு பிள்ளைகளான நான்கு பெண் பிள்ளைகளும் காட்டிலேயே திசை தெரியாம விளையாடினாங்க. 

பொழுது சாய்ந்தும் அப்பா - அம்மா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாம காட்டிலேயே சுத்திசுத்திவந்து கதறினார்கள். இருட்டிவிட்டது. அப்போது, அப்பகுதியில் ஏற்கனவே குடிசைபோட்டு தங்கியிருந்த ஒரு தம்பதியோட கனவில் தோன்றிய காளிதெய்வம் ஒரு மூக்குத்திகூட போடாத அந்த  நாலு பெண்களையும் இப்படி அனாதையாக தவிக்கவிடலாமா? அந்த பெண்பிள்ளைகள் நாலும் பாவாடையோட காடுபூரா  சுத்தியது கண்டு என் மனம் பொறுக்கவில்லை அந்த பிள்ளைகளை ஒரு மாமரத்தடியில் தெய்வங்களாக மாற்றி அமரவைத்துள்ளேன். அவங்கதான் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இனி தெய்வம். அவர்களை கும்பிட்டால் உங்களுக்கு நல்லது நடக்கும். அவர்கள் ஞாபகமாக இந்த ஊர்ல இனி  பிறக்கும் பெண்பிள்ளைகளுக்கு மூக்குத்தி போடக்கூடாது என்றும் உங்களுக்கு இந்த பாவாடை கன்னி தெய்வங்கள் துணையிருக்கும் என்று சொல்லி மறைந்தது. 
 

காலை எழுந்ததும் இப்பகுதியில் வாழ்ந்த குடும்பத்தினர் அந்த தெய்வங்கள் இருக்கும் இடத்தை தேடி அலைந்தனர். அந்த பெண்பிள்ளைகளின் பெற்றோர்கள் இரவு முழுவதும் பிள்ளைகளை தேடி அவர்கள் கிடைக்காமல் அந்த வருத்தத்தில் இறந்துபோனார்கள். காளி சொன்னபடி தேடி இந்த பெண்தெய்வங்கள் கல்லாக சமைந்ததை கண்டுபிடித்து அதை தெய்வங்களாக வழிபட்டு வந்தார்கள். அதையே நாங்களும் தொடர்கிறோம்.
 

Pavadai Kaliammankal Kovil

மேலும் இந்தக்கட்டுப்பாட்டை மீறி ஒரு குடுத்பத்தினர் தங்கள் மகளுக்கு மூக்குத்தி போட்டனர். அந்த குடும்பம் படாதபாடுபட்டது. அதனால் யாரும் பிறந்த பெண்பிள்ளைகளுக்கு மூக்குத்தி போடுவதில்லை. அதற்க்கு காரணமாக பாவாடைக்காரி தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் தை பொங்கலன்று வீட்டு வாசல்ல திரைச்சீலைக்கட்டி மறைத்துக்கொண்டு உள்ளே உரல்ல நெல்லைப்போட்டு குத்தி அந்த அரிசியைக்கொண்டு பாவாடைக்காரி தெய்வங்களுக்கு பொங்கல்வைத்து படையல்போடுவோம். அந்த பொங்கலை வெளியாட்களுக்கு கொடுக்கமாட்டோம். இது மட்டுமல்ல இந்த ஊர்ல உழவு மாடுகள், வண்டிமாடுகள் என எந்த மாடுகளுக்கும் மூக்கணாங்கயிறுகூட  போடுவதில்லை அப்படிப்பட்ட தெய்வக்கட்டுப்பாடு உள்ள ஊர் இது. இந்ததெய்வங்களை  வழிபடும் மக்கள் எந்தஊரில் போய் வாழ்ந்தாலும்கூட தங்கள் பெண்பிள்ளைகளுக்கு மூக்குத்தி போடமாட்டார்கள்''  என்கிறார்கள் ஊர் பொதுமக்கள். வித்தியாசமான  தெய்வபக்தியுள்ள கிராமமாக திகழ்கிறது பல்லேரிபாளையம்.