பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பைவிட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த பதிவில், “சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம். திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை. பெண்கள் முன்னேற்றம்தான் சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசை இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.