ஆன்டி-இந்தியன் பிரச்சனை, ஆண்டாள் பிரச்சனை, இப்போது பெரியார் சிலை பற்றிய கருத்து, பின் அதற்கு மறுப்பு என எப்பொழுதும் சர்ச்சைகளிலேயே இருக்கிறார் ஹெச்.ராஜா. தன்னைப் பற்றி நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ எப்பொழுதும் பேச்சு இருக்கவேண்டும் என்று நினைப்பவர், நடப்பவர். சாரணர் இயக்க தேர்தலிலிருந்து சாப்பிட்ட சால்னாவில் உப்பு வரை இவர் கை வைக்காத பிரச்சனைகளே இல்லை. ஆனால், பாஜக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் வாய் திறவாமல் ட்வீட்டில் பதில் சொல்லுவார். தமிழகத்தில் பாஜகவின் ஒலி வடிவமாக இருந்து அதன் இருப்பைக் காட்டுபவர். இதுபோன்று தங்களின் சர்ச்சை பேச்சை வைத்து அரசியல் செய்யும் இந்திய அரசியல்வாதிகள் யார் என்றும் என்னென்ன பேசியிருக்கிறார்கள் என்றும் பார்ப்போம்.
முதலில் நாம் பார்க்கப் போவது பாஜகவை சேர்ந்த உத்திரபிரதேச அமைச்சர் சாக்ஷி மஹராஜ், இவரை பற்றி சொல்லவேண்டும் என்றால் தமிழகத்தின் சர்ச்சை நாயகன் ஹெச்.ராஜாவுக்கே அண்ணன் என்று சொல்லலாம். இவர் பேசியதில் இந்தியாவையே உலுக்கிய பேச்சுக்கள் சில இருக்கின்றன. காந்தியைக் கொன்ற கோட்சேவை வல்லவர், நல்லவர் இந்தியாவின் சுதந்திரத்திற்கு போராடியவர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். "இந்தியாவில் இந்து மதம் வளரவேண்டும் என்றால், இந்து பெண்மணிகள் ஒவ்வொருவரும் நான்கு குழந்தைகளை பெத்துகொள்ள வேண்டும்" என்றார். "இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான மக்கள்தொகைக்கு இசுலாமியர்களே காரணம், அவர்கள்தான் நான்கு மனைவி நாற்பது குழந்தைகள் என்று இந்தியாவின் மக்கள்தொகையை வளர்த்துவிட்டனர்" என்று பேசியிருக்கிறார். எல்லாவற்றையும் விட, பஞ்சாபில் பெண் சிஷ்யைகளை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதற்காகக் கைதான போலிச் சாமியார் குர்மீத் சிங்கை எந்த தண்டனையும் இன்றி விடுவிக்க வேண்டும். சுவாமிகள் என்றாலே தண்டனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள்" என்று தன் உச்சத்தை காட்டியுள்ளார். இவரும் பார்க்க சாமியார் போலத்தான் இருப்பார். இதற்கு முன்னர் இரண்டு முறை பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மாட்டியிருக்கிறார். ஒருமுறை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆர்எஸ்எஸ்ஸை விமர்சித்ததிற்கு இந்த சாக்ஷி பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, பினராயி விஜயனின் தலையை கொண்டுவருபவர்களுக்கு பரிசு தருவதாக அறிவித்தார். அரசியல் செய்வதைத் தவிர காமெடியும் ரவுடியிஸமும் நன்றாக செய்வார். ஆனால், அதுதானே இப்போது அரசியலாக இருக்கிறது.
பாபுலால் கவுர், முன்னாள் மத்திய பிரேதச முதல்வர். சர்ச்சை பேச்சுக்கு குறைவில்லாதவர். தற்போது முக்கிய பதவியெதிலும் இல்லை என்றாலும் அரசியல் பேசிக்கொண்டே இருப்பவர். 2014ஆம் ஆண்டில் "பாலியல் துன்புறுத்தல் என்பது ஒருவிதத்தில் சரி, ஒருவிதத்தில் தவறு" என்று கருத்தை உதிர்த்து வாங்கிக் கட்டிக்கொண்டவர். மேலும், "பாலியல் துன்புறுத்தல் என்பது சம்மந்தப்பட்ட நபர்களின் பிரச்சனை. அதில் அரசாங்கம் தலையிட கூடாது" என்றும் புதிய தத்துவம் விட்டவர். இதே போன்று, 2015ல் ஒரு உள்ளூர் செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டியில் ரஷ்ய தலைவரின் மனைவி ஒருவர் இவர் கட்டியிருந்த வேஷ்டியை பார்த்து ஆச்சரியத்துடன், "எனக்கும் இதை எவ்வாறு கட்டுவது என்று கற்றுத்தாருங்கள். அதற்கு இவர் "நான் கட்டுவது மட்டுமல்ல எப்படி அதை அவிழ்ப்பதும் என்றும் சேர்த்து கற்றுத்தருகிறேன்" என்று சொன்னாராம். இதை மிகுந்த பெருமிதத்துடன் பத்திரிகைக்கு கூறியுள்ளார். குடிப்பழக்கத்தால், சமூகத்தில் கொலை கொள்ளை நடப்பதில்லை என்றும் குடி என்பது அவரவரின் அடிப்படை உரிமை என்றும் முழங்கியுள்ளார். 2016ல் நிகழ்ச்சி ஒன்றில், பாபுலால் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. இவர் ஒரு முறை சென்னைக்கு வந்து சென்ற பின் "சென்னை பெண்கள் முழுதாய் மறைக்கும் உடை அணிந்திருப்பதால் அங்கு வன்கொடுமைகள் நடப்பதில்லை" என்று புகழ்ந்தார். எத்தனை வயதானாலும் புத்தி அதேதான் என்பதற்கு உதாரணம் இவர்.
சாத்வி நிரஞ்சன் ஜோதி, பெண் அரசியல் சர்ச்சைவாதி. வாக்காளர்களை பார்த்து "எங்களுக்கு ஓட்டு போடுபவர்கள் ராமரின் குழந்தைகள் மற்றவர்கள் தவறாகப் பிறந்த குழந்தை" என்று வாக்கு சேகரித்தார். "இசுலாமியர்களும் கிறிஸ்துவர்களும் எங்களுக்கு வாக்களித்தால் அவர்களும் ராமரின் குழந்தை" என்றும் 'மதநல்லிணக்கமாக'க் கூறினார். வாக்கு சேகரிப்புக்கும் கூட கடவுளை வைத்து பயமுறுத்தியவர் இவர். மற்ற நேரங்களில் இந்து மதம் மட்டும், தேர்தல் என்றால் எம்மதமும் சம்மதம். இன்னொரு பேச்சில், "இந்து பெண்கள் மதமோ சாதியோ மாறி திருமணம் செய்யக்கூடாது" என்று கூறுகிறார். வடக்கின் சொர்ணா அக்காவாக திகழ்கிறார்.
கடைசியாக இருப்பது உத்திர பிரதேச முதல்வர் யோகிதான். என்னதான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் அடிப்படை மாறாமல் சர்ச்சையும் பிரிவினையும் இவரது பேச்சு . ஒருமுறை, "ஹிந்து ஆண்கள் 100 இசுலாமிய பெண்களை திருமணம் செய்யவேண்டும்" என்று லவ்ஜிகாத்துக்கு எதிராகப் பேசும்போது சொன்னார். லவ்ஜிகாத் என்பது இசுலாமிய ஆண்கள் ஹிந்து பெண்களை காதலித்து மதம் மாற வைப்பது என்று பாஜக, ஆர்எஸ்எஸ் விளக்கம் கொடுக்கின்றன. இத்தனை ஏன், ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு போ என்று சாடினார், இவர்கள் பேசும் மொழி தீவிரவாதத்திற்கு உரியது என்றார்.
அடிப்படைவாதமும் மதவாதப் பேச்சும் இவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பது. பாஜகவின் பீரங்கிகளாக ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய அரசியல்வாதிகள் வெவ்வேறு கட்சிகளில் இருக்கின்றனர். பிரபலமாக இருக்க இதையெல்லாம் ஒரு உத்தியாகவே பயன்படுத்துகின்றனர். இவர்கள் பேசுவதை மக்களும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. இருக்கும் கஷ்டங்களில் ஒரு பொழுதுபோக்கு கிடைப்பது நல்லதுதானே...