Skip to main content

‘கிராமப்புற மாணவர்களை உலக அரங்கில் ஏற்றுவதே திராவிட மாடல்’- உதயநிதி ஸ்டாலின்

Published on 25/11/2024 | Edited on 25/11/2024
Udhayanidhi says Dravidian model is to take rural students to world stage

கடலூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் முதல் நிகழ்வாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.  தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை ஊராட்சிகளுக்கு வழங்கினார். பின்னர் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகையில், “திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான்.  சாதாரண கிராமப் புறத்தில் உள்ள மாணவர்களை உலக அரங்கில் ஏற்றுவதற்காக இதுவரை திராவிட மாடல் அரசு தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளது.  தற்போது கடலூருக்கு வந்துள்ளேன்.  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள்கள் கார்த்திகா, சந்தியா ஆகிய இருவரும் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.  இது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களது பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார்கள். கலைஞரின் விடாமுயற்சி, வெற்றி ஆகியவற்றை கருதி விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு கலைஞரின் பெயரை வைத்துள்ளோம். அது மட்டும் இல்லாமல் 1000 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்குகிறோம். 

Udhayanidhi says Dravidian model is to take rural students to world stage

தமிழகத்தில் முதல்வர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார்.  அதில் ஒரு திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம்.  தமிழக முழுவதும் ஒரு கோடியே 14 லட்சம் மகளிர்கள் பயன்பெறுகிறார்கள். இதில் கடலூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் பயன்படுகிறார்கள். கடலூரின் மையப் பகுதியில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானம் கடந்த 1968 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1975-இல் அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அதனை திறந்து வைத்தார். தற்போது அந்த விளையாட்டு மைதானம் பொன்விழா காண்கிறது.  இதனை மேம்படுத்தும் விதமாக 15 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் உலக தரம் வாய்ந்த செயற்கை இழைகளாலான ஓடுதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யும் வகையில் மேம்படுத்தப்படும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனை கார்த்திகா மற்றும் சந்தியா ஆகியோர் அவர்களின் வெற்றி அனுபவங்களைப் பற்றிப் பேசினார்கள். 

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் துணை முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதன் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு  கலைஞர் நூலகம் திறந்து வைத்து திமுக மற்றும் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.   மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை தொடர்பான செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.  இந்நிகழ்ச்சிகளில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் , கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், நெய்வேலி சபா. ராஜேந்திரன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச் செல்வன் , விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Udhayanidhi says Dravidian model is to take rural students to world stage

திருச்சி,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று புதுச்சேரியில் தங்கிவிட்டு கடலூருக்கு 25-ந்தேதி காலையில்  உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.  இவரை கடலூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் வரவேற்றனர்.   புனித வளனார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு சாலையின் இரு புறங்களிலும் 700 க்கு மேற்பட்ட வாழைக்குளையுடன் கூடிய வாழை மரங்கள்  காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு  அலங்கார வளைவு. காய்கறிகளால் பாரம்பரிய மாட்டு வண்டி அமைத்து  துணை முதல்வரே வருக எனப் பூக்களால் எழுதப்பட்டு  உற்சாக வரவேற்பு அளித்தனர். இவர் கலந்து கொண்ட அனைத்து இடங்களிலும் முதல்வருக்கு இணையான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்