ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா, உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். இந்த நிலையில் திரைத்துறையில் சுரேஷ் சங்கையாவுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். அதில் அவருடன் பணியாற்றிய திரைக்கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில், “சுரேஷ் சங்கையாவுடன் நான் பணியாற்றியது இல்லை. ஆனால் அவருடைய ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தைப் பார்த்து யார் இந்த இயக்குநர் என்று அசந்து போய்விட்டேன். 50 படங்கள் எடுத்ததற்குப் பிறகு எடுக்க வேண்டிய மெச்சூரிட்டியான படமாக அந்த படம் இருந்தது. நான் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவரின் நண்பராக அந்த நிகழ்ச்சிக்கு சுரேஷ் சங்கையா வந்திருந்தார். நான் இங்கு இருப்பதற்குக் காரணம் அவர் சமீபத்தில் எடுத்திருந்த படம் ஒன்றில் என்னுடைய மகள் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் மூலம்தான் சுரேஷ் சங்கையா எனக்குப் பழக்கமானார். நல்ல மனிதர் அவர். நிறையப் படித்துள்ளார். அவர் வீட்டில் நிறையப் புத்தகங்களுடன் நூலகம்போல் இருக்குமென்று அவருடைய மனைவியிடம் பேசும்போது கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
நிறையப் புத்தகங்களைப் படித்து திறமையாகவும் புத்திசாலியாகவும் இருந்த அவர், சாதிக்கணும்னு வர்றீங்க, ஏன் சாதித்துவிட்டு போக மாட்றீங்க? அதுதான் எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ஒரு தாயாக இங்கு நான் மனம் வருந்தக் காரணம், அவர் நம்மை மட்டும் ஏமாற்றவில்லை ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்த அவரின் பச்சிளம் குழந்தையை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார். அதனால் எனக்கு அவர் மீது அவ்வளவு கோபம் இருக்கிறது. நாம் ஒன்றும் 200 வருடம் வாழ்வதற்கு கடவுளிடம் ஒப்பந்தம் செய்யவில்லை. சுரேஷ் சங்கையா அத்தனை புத்தகங்களைப் படித்து என்ன பிரயோஜனம்? அவர் தன்னையே முதலில் படிக்கவில்லையே? என்பது ரொம்ப மனத்திற்கு வேதனையாக இருக்கிறது.
நான் மரக்காணத்தில் நடந்த படப்பிடிப்பிலிருந்து இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். எப்படியாவது இங்கு வர வேண்டுமென்று நினைத்தேன். அவருடைய உதவி இயக்குநர்கள் மற்றும் அவருடைய குழுக்களில் உள்ளவர்கள் அவருடன் ஏதோ ஒரு விதத்தில் பயணப்பட்டிருப்பீர்கள். அவருக்கு இருந்த பழக்கங்கள் உங்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தயவு செய்து அதையெல்லாம் சரி செய்துகொண்டு குடும்பத்தை நினைத்துப் பாருங்கள். சாதித்ததை நினைத்துப் பாருங்கள். சுரேஷ் சங்கையா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ‘அம்மா நீங்கதான் இந்த கதையில் நடிக்க வேண்டும்’ என்று என்னிடம் ஒரு கதை சொன்னார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்படி இருந்துவிட்டு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் தனக்கு ஒன்றும் ஆகாது என்ற ஆணவத்தில் அவர் மறைந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் வந்து அவரைப் பற்றி நான்கு வார்த்தை நல்லதோ கெட்டதோ பேசுவதில் ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை. இன்னும் ஒரு மாதத்தில் அவரை எல்லோரும் மறந்துவிடுவார்கள். அவருடைய குழந்தைக்கு என்ன பண்ண முடியும் என்பத்தைப் பற்றித்தான் நான் யோசிக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு அவரின் முதல் குழந்தையின் கல்விக்காக பண உதவி கேட்டிருந்தார். நானும் உதவினேன். அதை இப்போது தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறேன். இது என்னால் முடிந்த உதவி. நல்ல உள்ளங்கள் அவரை சுற்றி இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. குறைவான வயதில் அவர் மறைந்தது, பார்த்துக்கொண்டிருக்கும் அவருடைய ஆத்மாவிற்கே ஷாக்காக இருக்கும். தயவு செய்து ஜாக்கிரதையாக இருங்கள். உடல்நலம் மிக மிக முக்கியமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சுரேஷ் சங்கையா குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்றார்.