ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், ஹக்கீம் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் நடித்த சானியா ஐயப்பன் மற்றும் ஹக்கீம் ஷா ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது இவரும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் நடித்த அனுபவங்களையும் தங்களுடைய சினிமா அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
சானியா ஐயப்பன் பேசுகையில், “சொர்க்கவாசல் படத்தின் கதை கேட்டுக்கும்போதே கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க வேண்டுமென்று தோன்றியது. என்னுடைய கெரியரில் மிகவும் சவாலான கதாபாத்திரம் இப்படத்தில் எனக்குக் கிடைத்தது. எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. இந்த படத்திற்காக அனைவரும் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளோம். எனக்குத் தமிழ் மொழியில் பேசி நடிப்பதற்கு கஷ்டமாக இருந்தது. இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை நான் இதுவரை அணிந்தது கிடையாது. என்னுடைய கதாபாத்திரம் ஆடியன்ஸூக்கு புதுமையாக இருக்கும். இறுகப்பற்று படத்தில் நடித்த பெண்ணா? இப்படி நடித்துள்ளார் என்று வியக்கும் வகையில் இருக்கும்.
பெரும்பாலும் இந்த படத்தை ஜெயில் செட் போட்டு எடுத்தனர். நான் ஜெயிலுக்கு வெளியில் இருந்து இந்த படத்தில் நடித்திருப்பேன். என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ரேவதி. இதில் அவள் மிகவும் வலிமையான கதாபாத்திரமாக இருப்பாள். நிறைய எமோஷ்னல் சீன் இருக்கும். படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் சேர்ந்து என்னுடைய கதாபாத்திரத்தில் நான் நடிக்க இலகுவாக இருந்தது. அந்தளவிற்கு அவருடன் சேர்ந்து நடிக்க வசதியாக இருந்தது. நான் இதற்கு முன்பு நடித்த படங்களைவிட, இந்த படத்தில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். அந்தளவிற்கு என்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்க கடினமாக இருந்தது. சொர்க்கவாசல் படப்பிடிப்பு வெளி இடங்களில் நடைபெற்றது. அந்த பகுதியின் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்தது. அதனால் இந்த படத்தில் நடிக்க நான் நிறைய உழைப்பை போட்டிருந்தேன். சொர்க்கவாசல் படத்தை நினைத்தாலே நான் பட்ட கஷ்டமெல்லாம் நினைவுக்கு வருகிறது. அதற்கான ரிசல்டை தியேட்டரில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
அதன் பிறகு சினிமாதுறையிலிருந்து தனக்குக் கிடைத்த அட்வைஸ் பற்றி சானியா ஐயப்பன் பேசும்போது,“நான் லண்டனுக்குப் படிக்கப் போயிருந்தேன். அப்போது அங்கு நடக்கவிருந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் மம்மூட்டி வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் நான் நடனமாட சென்றிருந்தேன். எனக்குத் தெரிந்த நடிகை ஒருவர், நான் அங்கு நடிப்பு கற்றுக்கொள்ள லண்டனில் இருப்பதைப் பற்றி மம்மூட்டியிடம் கூறினார். அதற்கு அவர் என்னை அழைத்து, இந்த வயதில் நடிப்பு கஷ்டமாகத்தான் இருக்கும். அதனால் நீங்கள் படிக்க வேண்டாம். ஏற்கனவே சில படத்தில் நடித்துள்ளீர்கள். அதனால் அப்படியே நடிப்பில் கவனம் செலுத்தி கெரியரை உருவாக்கு என்று அட்வைஸ் கொடுத்தார். அவர் சொன்ன ஓரிரு மாதங்களில் நான் படிப்பை விட்டு விட்டு திரும்ப நடிப்பதற்கு வந்துவிட்டேன். இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன்” எனக் கூறினார்.