தெலுங்கு நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் படமாக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. இப்படத்தில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சத்யா, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது
இந்நிலையில் இன்று சென்னையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது கலந்து கொண்டு பேசிய சத்யராஜ், “நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாஸிடிவ் ரிவ்யூஸ் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியில் ஹவுஸ்புல் ஆகிறது. எல்லாப்பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன் ஆனால் இன்னும் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை.
இப்படத்தில் சத்ய தேவ் என்னை தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி. இந்த டீமே அற்புதமான டீம். தமிழில் இப்போது பிஸியான ஆள் அசோக்தான். பான் இந்தியப் படங்கள் அதிகமானவுடன், இவர் வேலை அதிகமாகிவிட்டது. ஒரு படத்தில் எடிட்டர் பற்றிப் பாராட்டுகிறார்கள் என்றால், அவர் உழைப்பு அப்படிப்பட்டது. இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார். படத்தின் மேல் சத்யா காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரியது. அவ்வளவு உழைத்திருக்கிறார். படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்” என்றார்.