'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'ஜீவா' உள்ளிட்ட நல்ல படங்களை தந்துள்ளார். சமீபகாலமாக இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் 'வீரபாண்டியபுரம்' மற்றும் 'குற்றம் குற்றமே' படம் வெளிவந்தன. இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.
இந்நிலையில் சுசீந்திரன் அடுத்ததாக விஜய் ஆண்டனியை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இது குறித்து தயாரிப்பாளர் தாய் சரவணன் கூறுகையில், "இப்படத்தில் பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபரிதா அப்துல்லா நடிக்கிறார். ‘வள்ளி மயில்’ என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்தப் படம் 80-களில் நடக்கும் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படம் உண்மை சம்பத்தை தழுவி எடுக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை மே 16-ம் தேதி வனப்பகுதிகளில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தின் வசனங்களை எழுதுவதற்காக சுசீந்திரன் பெரியகுளம் உள்ளிட்ட சில வனப்பகுதிகளில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்". டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை டி.என். தாய் சரவணன் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.