உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தி ஐம்பது ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனா தொற்று காரணமாகத் திரைப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சினிமா தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்சிக்கு நடிகர் நடிகைகள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.அதேபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர், நடிகைகள், நாடக நடிகர்களுக்கும் சில நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதுவரை ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம், கார்த்தி ரூ.2 லட்சம், நடிகர் சூரி ரூ.1 லட்சம், நாசர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் தலா ரூ.50 ஆயிரம், பொன்வண்ணன், சாய்பிரதீப் ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம், சங்கீதா ரூ.15 ஆயிரம் வழங்கி உள்ளனர்.பூச்சி முருகன்,கோவை சரளா, சத்யபிரியா, ரோகிணி, லதா, சச்சு, நாகிநீடு, பிரபா ரமேஷ், சேலம் பார்த்திபன் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி உள்ளனர்.இதுவரை ரூ.15 லட்சத்து 65 ஆயிரத்து 100 வசூலாகி உள்ளது. இந்நிலையில் பழம்பெரும் நடிகை 'குட்டி பத்மினி', ரஜினி, கமல்,அஜித், விஜய்க்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்... "நடிகர் சங்கம் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது.ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்,தயவு செய்து, உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்குச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.