உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு இங்கிலாந்தில் வைத்து நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணியும் அடுத்தடுத்த தொடர்கள் மூலம் தங்களின் பலத்தைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் இங்கிலாந்து டூர் என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்னொருபுறம், இந்திய அணியில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான வீரர்கள் சிலர், உலகக்கோப்பைக்கு முன்பாகவே தங்கள் ஓய்வை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிலர் கணித்துள்ளனர். உலகக்கோப்பைக்கு முன்னதாக தங்கள் ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும்,‘இவங்க இருந்திருந்தால் மேட்ச் லெவலே வேற’ என சொல்லவைக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்...
அமித் மிஷ்ரா
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடக் கூடிய அமித் மிஷ்ராவால் சர்வதேச போட்டிகளில் ஏனோ ஜொலிக்கவேயில்லை. இந்தியாவுக்காக 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர், 64 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 4.73 ரன்கள் என்ற சிறந்த எக்கானமியும் கொண்டிருந்தாலும் யஸ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் ஆதிக்கம் இவருக்கான வாய்ப்பை பொய்யாக்கிவிட்டன. 2000ஆம் ஆண்டிலேயே களத்திற்கு வந்தபோதும் அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜனால் லைம்லைட்டுக்கு வரமுடியாமலே போன இவருக்கு வயது 35.
இர்ஃபான் பதான்
தனது விளையாட்டுத் திறமையால் அடுத்த கபில் தேவ் என்று அழைக்கப்பட்டவர். ஆனால், அடுத்தடுத்த காயங்கள் அவரை அப்படியே முடக்கிவிட்டன. பாகிஸ்தானுக்கு எதிராக 2006ல் ஹாட்-ட்ரிக், 2008ல் பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவைப் பந்தாடியது, 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிரடி என இவரை நினைத்தாலே வரும் மலரும் நினைவுகள் ஏராளம் உண்டு. அப்படியிருந்தும் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடமல்போய், கடைசியாக நடந்த ஐ.பி.எல். சீசனில் ஏலத்தில் விற்பனையாகாமலும் போனார்.
கவுதம் கம்பீர்
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அத்தியாவசியமான 97 ரன்களை விளாசினாலும், யாராலும் பாராட்டப்படாமல் தனித்து விடப்பட்டவர். 2016ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கு உள்கட்சி அரசியல் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஒருபுறம் ஐ.பி.எல். போட்டிகளில் பரபரப்பாக ஆடினாலும், இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பே அவருக்கு கிடைக்கவில்லை. கடைசியாக நடந்த ஐ.பி.எல். சீசனிலும் தனது பொறுப்பைக் குறைத்துக்கொண்டு, பெவிலியனில் அமைதியாக மட்டுமே அமர்ந்திருந்தார்.
ஹர்பஜன் சிங்
அணில் கும்ப்ளே உடன் இணைந்து பல்வேறு தொடர்களில் இந்தியாவின் வெற்றியை தீர்மானித்தவர். 2007 டி20, 2011 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் முக்கியப்பங்கு வகித்தவர் என்றாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் வருகைக்குப்பின் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். நடந்துமுடிந்த ஐ.பி.எல். சீசனிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை என்றாலும், ஹர்பஜன் என்றால் ஒரு தனி நம்பிக்கை இருக்கும். அவரது கடந்தகாலத்தை ஒப்பிடும்போது, இதுவே ஓய்வை அறிவிக்க சரியான நேரம் எனலாம்.
யுவ்ராஜ் சிங்
இந்திய அணியின் சொதப்பலான ஃபீல்டு செட்-அப்பை மாற்றியமைத்தவர்களில் முக்கியமானவர். ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள், 2011 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் என்ற மகுடங்களே அவரது திறமையின் சாட்சி. ஆனால், புற்றுநோய் பாதிப்பில் இரண்டு முழு ஆண்டுகளைப் பறிகொடுத்து, அதன்பின்னரும் இந்திய அணியில் இடம்பிடித்து வாழ்க்கையையே போராட்டமாக மாற்றியவர். மீண்டுவந்த பிறகு அவரிடம் பரபரப்பு குறைந்து, பயம் தொற்றிக்கொண்டதாகவே வர்ணனையாளர்கள் விமர்சித்தனர். விண்டேஜ் யுவிக்காக ஒரு கூட்டம் இன்னமும் காத்திருப்பது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.