இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ரன்களை திரட்ட ஆரம்பித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 9.5 ஓவர்களில் 96 ரன்களை சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து சில நிமிடங்களில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்தார். இவர் 26 பந்துகளில் 57 ரன்களை எடுத்திருந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஜோடி ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது.
இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளித்தது. கேப்டன் பவுமா ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற டி காக் மற்றும் மில்லெர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை எடுத்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய டி காக் 69 ரன்களும் மில்லெர் 47 பந்துகளில் 106 ரன்களும் எடுத்திருந்தனர். 4 ஆவது விக்கெட்டிற்கு 174 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. டி 20 கிரிக்கெட் போட்டியில் 4 ஆவது விக்கெட்டில் கைகோர்த்த வீரர்கள் சேர்த்த அதிகபட்ச ரன்களாகும்.
ஆட்டநாயகனாக கே.எல்.ராகுல்தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சொந்த ஊரிலில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.