இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இதில் நாக்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் தற்போது வரை 348 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது, தொலைக்காட்சி வர்ணனையில் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்டுகளில் அரை சதத்தைச் சதமாக மாற்றுவது குறித்த புள்ளி விவரம் திரையிடப்பட்டது. இதில் முதல் இடத்தில் தமிழக வீரர் முரளி விஜய் இருந்தார். முகமது அசாருதீன் 2வது இடத்தையும், பொல்லி உம்ரிகர் 3வது இடத்தையும், ரோஹித் சர்மா, விராட் கோலி முறையே 4 மற்றும் 5வது இடங்களைப் பிடித்திருந்தனர். இந்தப் புள்ளி விவரத்தைப் பார்த்து வர்ணனையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆச்சர்யமடைந்தார். இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ‘இந்தப் பட்டியலில் ரோஹித் உள்ளிட்ட வீரர்களுடன் முரளி விஜய் பெயர் முதலிடத்தில் இருப்பது வியப்பாக உள்ளது’ எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து முரளி விஜய் ட்விட்டரில் கூறியதாவது, “மும்பையைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களுக்கு தென் பகுதியில் உள்ள வீரர்கள் சாதனையை எப்போதும் புகழ்ந்து பேச முடியாது” என்றார். இது குறித்து விளக்கமளித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “இந்தப் பட்டியலில் முரளி விஜய் இருப்பது மிகவும் நல்ல விஷயம். சொந்த மண்ணில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அரை சதத்தை, சதமாக மாற்றுவதில் உண்மையிலும் சிறப்பான சாதனை. ஆனால், இதுபோன்ற அபார பங்களிப்பை வழங்கிய வீரர்களை மறந்துவிடுகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக 2008 முதல் 61 டெஸ்டுகள், 17 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் முரளி விஜய். டெஸ்டில் 12 சதங்கள், 15 அரை சதங்களுடன் 3982 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில்தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்தார்.