ஐபிஎல் தொடரின் இதுவரை ஒரு முறைகூட கோப்பையை வெல்லமுடியவில்லை எனினும், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற ஒரு அணி என்றால் அது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எனலாம். கோலி தலைமையில், சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என பலம் மிக ஒரு அணியாகவே ஆர்.சி.பி அணி இத்தனை சீசன்களிலும் திகழ்கிறது. இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் புதிய நிர்வாக குழுவின் சில செயல்களுக்கு அந்த அணியின் கோலி, சாஹல் உள்ளிட்டோர் நேரடியாகவே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆர்.சி.பி அணியின் புதிய நிர்வாக குழு, அந்த அணியின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பக்கங்களின் புரொஃபைல் போட்டோக்களை நீக்கியத்துடன், இன்ஸ்டாகிராமில் உள்ள சில பதிவுகளையும் நீக்கியுள்ளது. மேலும் புரொஃபைல் பெயரையும் மாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் லோகோவும் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றங்கள் தொடர்பாக அணி வீரர்கள் யாரிடமும் இதுவரை தகவல் தெரிவிக்காத சூழலில், கோலி, சாஹல் உள்ளிட்ட வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள சாஹல், "இது என்ன கூக்ளி? புரொஃபைல் புகைப்படம் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் எங்கு சென்றன?" என கேட்டுள்ளார். அதேபோல கோலி தனது பதிவில், "போஸ்ட்களை காணவில்லை. கேப்டனிடம் கூட தகவல் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் தெரியப்படுத்துங்கள்" என தெரிவித்துள்ளார். அதேபோல டிவில்லியர்ஸும் இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். டிவில்லியர்ஸ், சாஹல் வரிசையில் கேப்டன் கோலியும் இந்த விஷயத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதற்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.