இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் இஷான் கிஷன். உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர், பிறகு கில் வந்ததாலும், அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் செயல்பட்டதாலும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், டெஸ்ட் போட்டிகளுக்கு முன் மனச்சோர்வு காரணமாக சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் கீப்பராக செயல்படுவதால் தனக்கு இடம் கிடைக்காது என்பதாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருவதாலும் ஓய்வு எடுத்தார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தது.
தற்போது, சஞ்சு சாம்சன் கீப்பராக அணிக்கு திரும்பி இருப்பதாலும், ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி கீப்பராக செயல்படுவதாலும், அடுத்து ரிஷாப் பண்ட் உடல் தகுதி பெற்று விட்டால் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இனி அணிக்கு அணியில் தனக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், அவர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் கிளம்பியது.
இந்நிலையில், நாளை இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி மொகாலியில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல் டி20 போட்டியில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் எனவும், அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் விராட் கோலி களமிறங்குவார் எனவும் தெரிவித்தார். மேலும் ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய டிராவிட், ஸ்ரேயாஸ் அணியில் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தையும் விளக்கினார். அணியில் பல பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஸ்ரேயாஸை தேர்வு செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.
அப்போது இஷான் கிஷன் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பயிற்சியாளர் டிராவிட், இஷான் கிஷனே இந்த அணி தேர்வுக்கு தன்னை கருத்தில் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அவரேதான் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு ஓய்வு கேட்டதால், அவரின் உணர்வுகளை மதித்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் விளக்கினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய நிலைத்தன்மையை நிரூபித்தால், அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்க கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
- வெ. அருண்குமார்