
2025 - 2026ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளின் போது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அதாவது, சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கூறி அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், நம்பிக்கையிலலாத் தீர்மானம் குறித்து வரும் திங்கட்கிழமை (17-03-25) அன்று பேச அனுமதி தருவதாக என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். அதனை ஏற்காத அதிமுக எம்.எல்.ஏக்கள், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், சபாநாயகருக்கு எதிராக சட்டப்பேரவை செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வழங்கினர்.
இந்த நிலையில், அதிமுக கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக் கோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு மற்றும் விவாதம் இன்று (17-03-25) நடைபெறவிருக்கிறது. துணை சபாநாயகர் பிச்சாண்டி அல்லது மாற்று தலைவர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்கள். சபாநாயகர் மீது அதிமுக எம்.எல்.ஏக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.