இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும், சர்பராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் ரோஹித் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ஜெய்ஸ்வால், கில் இணை சிறப்பாகவும், பொறுப்பாகவும் ஆடியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 3 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். கில் அரை சதம் கடந்தார். 102 ரன்கள் இருந்தபோது ரிட்டையர்டு ஹர்ட் முறையில் ஜெய்ஸ்வால் 102 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த பட்டிதார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதனால் நைட் வாட்ச்மேனாக குல்தீப் வந்தார். குல்தீப் 3, கில் 65 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோர் 196-2 என மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது.
தொடர்ந்து 4ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கில் மற்றும் குல்தீப் சிறப்பாக ஆடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 91 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்னர் ரிட்டையர்டு ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால் மீண்டும் ஆடக் களமிறங்கினார். சிறப்பாக நைட் வாட்ச்மேன் இன்னிங்ஸ் ஆடிய குல்தீப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வாலுடன் சர்பிராஸ் கான் இணைந்தார். இந்த இணை அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. சிறப்பாக மற்றும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் மற்றும் சர்பிராஸ் கான் இணை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சர்பிராஸ் கானும் அரைசதம் கடந்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 430 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. தொடக்க வீரர் க்ராவ்லி 11 ரன்களிலும், டக்கெட் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். தேநீர் இடைவேளையின் போது 8.2 ஓவர்களில் 18-2 என இங்கிலாந்து ஆடி வருகிறது.
- வெ.அருண்குமார்