அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் கேரளாவைச் சேர்ந்த ரசிகர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் கோட்டயம் அருகிலுள்ள அருமானூர் பகுதியைச் சேர்ந்தவர் தினு அலெக்ஸ் (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவர், தீவிர கால்பந்தாட்ட ரசிகர் ஆவார். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைப் போட்டியில் நேற்று அர்ஜெண்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதிய நிலையில், 3 - 0 என்ற கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்றது. அர்ஜெண்டினா அணியின் இந்தத் தோல்வியைக் கண்டு விரக்தியடைந்த தினு, தனது வீட்டில் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறியுள்ளார்.
அருமானூர் பகுதிக்கு அருகாமையில் லட்சுமி நதி ஓடுகிறது. இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், லட்சுமி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர், தினு லட்சுமி நதியில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடிவருகின்றனர். யாருடனும் அதிகம் பேசாத தினு, கடந்த சில தினங்களாக கேபிள் டிவி நிறுவனத்திடம் கால்பந்தாட்டப் போட்டிகள் சரியாக ஒளிபரப்பாகவில்லை என்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.