ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 11ஆவது சீசன் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, அதன் மீதான எதிர்பார்ப்பானது அதிகரித்தது. இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் நடந்துமுடிந்தது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஐ.பி.எல். சீசன் தொடக்கத்தில் இருந்து விளையாடி, இரண்டு முறை கோப்பையை வென்ற கேப்டனாகவும் இருந்தவர் கவுதம் காம்பீர். நடந்து முடிந்த ஏலத்தில் கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் எடுக்காததால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பு வகிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ் லின் கொல்கத்தா அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரை ரூ.9.6 கோடி கொடுத்து தக்கவைத்துக் கொண்டது கொல்கத்தா அணி. இந்த ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனின் போது தோள்பட்டைக் காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும், ஏழு போட்டிகளில் 295 ரன்கள் எடுத்திருந்தார் கிறிஸ் லின். அந்த சீசனில் அவரது சராசரி ரன்கள் 49.16; மூன்று அரை சதங்கள் அதில் அடக்கம். ‘மூத்த வீரர்கள் அணியில் இருக்கும்போது எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது பெரிய விஷயம். கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டால், சிறப்பாக செயல்படக் காத்திருக்கிறேன்’ என கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.