2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் தோனி இடம்பெற்றிருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாக சவுரப் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரப் கங்குலி. இந்திய அணியை அந்நிய மண்ணில் வெற்றிபெறச் செய்து, பல உச்சங்களுக்குக் கூட்டிச் சென்றவர். இந்திய அணியின் ராசியான கேப்டன்களுள் ஒருவரான சவுரப் கங்குலி, ‘எ சென்சுரி இஸ் நாட் எனஃப்’ என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து அவரது புத்தகத்தில், ‘நான் பல ஆண்டுகளாக அணியில் உள்ள வீரர்களில் மிகக் கடுமையான சூழல்களைத் தகவமைத்துக்கொண்டு, ஆட்டத்தின் பாதையை மாற்றக் கூடிய ஒருவரை தேடிக்கொண்டிருந்தேன். 2004ஆம் ஆண்டு அணியில் சேர்ந்த தோனியிடம், நான் தேடிய எல்லா தனித்திறமைகளும் இயற்கையாகவே இருப்பதை கவனத்தேன். அவர் வந்த முதல் நாளில் இருந்தே அவரைக் கண்டு வியந்திருக்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.
மேலும், ’தோனி 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால், அப்போது அவர் டிக்கெட் கலெக்டராக இருந்தார். இன்று நான் நினைத்தது சரி என்று அவர் நிரூபித்துவிட்டார். அவர் பல சாதனைகளைப் படைத்து தான் யார் என்பதை இப்போது நிரூபித்துவிட்டார்’ என உற்சாகமாக எழுதியுள்ளார்.