இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், கோலி கலந்துகொள்ள எதிர்ப்புகள் வலுத்துவருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பன் விராட் கோலி, சர்வதேச நாடுகளில் மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர். ஆனால், இங்கிலாந்து மண்ணில் அவருக்கு ஃபார்ம் நீடிக்கவில்லை என்றே சொல்லலாம். இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரில் கோலியின் சராசரி ரன்கள் வெறும் 13.40 மட்டுமே. இந்நிலையில், இங்கிலாந்திற்கு அடுத்த சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி தயாராகி வருகிறது. அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் விராட் கோலி ஜொலிக்கவேண்டும் என்பதற்காக, இங்கிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூர் போட்டிகளில் களமிறங்க இருக்கிறார். அங்குள்ள விளையாட்டுச் சூழலை உள்வாங்கிக் கொள்வதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஐ.பி.எல். முடிந்தபின் தொடங்கயிருக்கும் இந்தப் போட்டிகளில் கோலி கலந்துகொள்வது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இங்கிலாந்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்ஸ், ‘உள்நாட்டு வீரர்களை வலுவாக்குவது மட்டும்தான் உள்நாட்டு கிரிக்கெட்டின் நோக்கம். இங்கு வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளூர் வீரர்களை அதில் அதிகப்படுத்தி, எதிர்கால அணியை வலுச்சேர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு கோலிக்கு பலனளிக்கும் விதமான இந்த முயற்சியின் பலன், இங்கு இந்தியாவிற்கு எதிராக நடக்கயிருக்கும் டெஸ்ட் தொடரில் பிரதிபலிக்கும்’ என தெரிவித்துள்ளார்.