Skip to main content

நவீன காதலில் குழம்பித் தவிக்கும் காதலர்களுக்கு; மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா தரும் லவ் டுடே டிப்ஸ் 

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

 DR Poorna Chandrika love today tips

 

காதல் என்கிற உணர்வு அனைவருக்குள்ளும் இருந்தாலும் காதல் குறித்த உண்மையான புரிதல் இல்லாமல் பலர் தவிக்கின்றனர். அவர்களுக்கான ஆலோசனைகளை மனநல மருத்துவர் டாக்டர் பூர்ண சந்திரிகா வழங்குகிறார்

 

சில நாட்கள் பழகிவிட்டு திடீரென்று காணாமல் போய், மீண்டும் வாழ்க்கைக்குள் வந்து இப்படி ஒரு குழப்பமான ஆன்/ஆஃப் ரிலேஷன்ஷிப் இன்று பல இளைஞர்களிடையே இருக்கிறது. இப்படிச் செய்யும் ஆண்களைக் கொலை செய்யக்கூட சில பெண்கள் நினைக்கின்றனர். இப்படி ஒரு கேஸ் என்னிடம் வந்தது. அந்தப் பையனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்து அந்தப் பெண் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளானாள். அவளால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இந்த உறவு சரி வராது என்கிற முடிவுக்கு இப்போது அவர்கள் வந்துள்ளனர். குறிப்பாக, அந்தப் பெண்ணுக்கு அந்த உணர்வு வந்துள்ளது.

 

நமது உறவை விரும்பாத அல்லது அதற்கு முக்கியத்துவம் தராத, நேசிப்பில் ஏற்றத்தாழ்வை காட்டுகிற நம்மிடமிருந்து பிரிந்து போக விரும்புகிற ஒரு உறவை அனுமதித்தல் என்ற முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பிடிக்காத ஒரு உறவிலிருந்து வெளியே வந்தால் தான் இன்னொரு நல்ல உறவைத் தொடங்க முடியும். தோல்வியை, ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சிறு வயதிலிருந்து வர வேண்டும். எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணம் பலருக்கு இங்கு இருக்கிறது. 

 

நோ என்றால் நோ தான் என்கிற புரிதல் அனைவருக்கும் வேண்டும். ஒருவரை அவர் விரும்பாமல் பின்தொடர்வது தவறான விஷயம். இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு சரியான தூக்கமே கிடையாது. சரியான தூக்கம் இல்லாததால் குழப்பமும், கோபமும் அதிகம் வருகிறது. நன்றாகத் தூங்கி, நன்றாக சாப்பிட்டு, தங்களைத் தாங்களே முதலில் நன்கு கவனித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நல்ல உறவுகள் தானாக அமையும்.