Skip to main content

கண் பார்வை மங்குகிறதா? - சரி செய்ய உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

 Blurred vision? - Psychotherapy tips to help you fix!

 

முதுமை என்பது வாழ்வின் ஒரு கால கட்டமாகும்.  அனுபவமும், முதிர்ச்சியும் கொண்ட இந்த பருவத்தில் உடலானது பலமிழப்பது இயல்பான ஒன்றுதான். முதுமைக் காலத்தை இனிமையாக இளமையாகக் கொண்டு செல்ல சித்தர்கள் கூறும் நல்லொழுக்கங்களைப் பற்றி காண்போம்.

 

முதுமையை வென்று என்றும் இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ சில ஆரோக்கிய நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே போதுமானது. முதுமையில் ஏற்படும் குறைபாடுகளையும் அவை ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும், வந்தபின் எப்படி தீர்ப்பது என்பது பற்றியும் விரிவாக அறிவோம். மேலும், முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை களைய சித்த மருத்துவத்தில் கூறியுள்ள மருத்துவ முறைகளைக் காண்போம். கண், மூக்கு, காது, வாய், மெய் ஆகிய ஐம்பொறிகளில் கண் தான் முதல் உறுப்பாகும்.  இந்தக் கண்களில் முதுமையில் பார்வைக் குறைபாடு ஏற்படும்.

 

தெளிவுற வெளியாய் நிற்குந் தீங்கில்லை முப்பத் தைந்தில்
ஒளியறப் புகைந்து சற்றே ஒதுங்கிடு நாற்பத் தைந்தில்
வெளியுறப் புகைந்து காட்டும் மேவிய ஐம்பத் தேழில்
களியுற விருளுங் கண்டாய் ஆண்டது நூறு தாமே.


- நாகமுனி நயனவிதி

 

முதுமையில் கண்கள் கூசும். பார்வை புகைந்து காணப்படும். கிட்டப் பார்வை ஏற்படும். கண்கள் பிரகாசமில்லாது மங்கிப் போய்விடும். கண் ஒளி குறையும். பொருள்கள் சரிவரத் தெரியாமல் சந்தேகத்தை உண்டுபண்ணும். முதுமையில் ஏற்படும் கண் சந்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி ஒளிபெறுவதற்கு சில நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் முதுமையிலும் கண் பார்வை தெளிவாகத் தெரிய வழி செய்யலாம்.

 

பற்களை தினமும் காலையில் ஆல், வேல், பலா இவற்றுள் ஏதேனும் ஒன்றின் குச்சியைக் கொண்டு துலக்க வேண்டும். அல்லது இதன் பொடி கலந்த பற்பசைகளைப் பயன்படுத்தலாம். வாயை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவற்றை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

 

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும். முதுமைக் காலத்தில் கண்டிப்பாகத் தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாகத் தேய்த்து, அரிசி தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களைப் பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும. இவ்வாறு செய்து வந்தால் முதுமையில் உண்டாகும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

 

உணவு முறை

மதிய உணவில் பண்ணைக் கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

 

தின்னார் பண்ணைச் சிறுகீரை தனின் மறந்தார் சீர்கேடாய்
பொன்னாங் காணிக் கூறிகூட்டர் பூசார் பாதம் நெய்யுண்ணார்
பண்ணார் மதியந் தனைப் பாரார், பால்வார்த் துண்ணார் பல் தேயார்
கண்ணார் நோயால் கவல் வரதையாமும் சொல்லக் கடவோமே  - என்றனர்

 

கண்களில் நோய் வராமல் தடுக்க

 

ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து, மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.