பாண்டாக்கள் பெரிய உருவம், அழகிய தோற்றம், கறுப்பு-வெள்ளை நிறம் என மனிதர்களை மிகவும் கவர்ந்தவை. நம் ஊர்களில் குண்டான தோற்றம் உடையவர்களை சமீபமாக "பாண்டா" என்று கூறி கிண்டல் செய்வதும் உண்டு. ஆனால், பாண்டா என்று கிண்டலாக அழைக்கப்படுபவர்கள் கூட மகிழும் அளவுக்கு அழகானதும், விரும்பப்படுவதாகவும் இருக்கின்றன பாண்டாக்கள். குழந்தைகளுக்கும் இளம்பெண்களுக்கும் பிடித்த விலங்குகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் பாண்டாக்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட அழகான பாண்டாக்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...
'ஃபுட்டீ' பாண்டாக்கள்...
மத்திய சீனாவின் மலைத்தொடர்களில் மூங்கில் காடுகளில் வாழ்கின்றன. இவை பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது என்றே தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றன. மூங்கில் தான் பாண்டாக்களின் முக்கிய உணவு. மூங்கில் மிகவும் குறைவான ஊட்டச்சத்தினைக் கொண்டது. ஆனால், ஊட்டச்சத்தின் தேவையோ பாண்டக்களுக்கு அதிகம். எனவே ஒரு நாளைக்கு 12 முதல் 38 கிலோ மூங்கிலை உட்கொள்கின்றன. பெரும்பாலும் விலங்கியல் அருங்காட்சியகத்தில் இருக்கும் பாண்டாக்கள் பூக்கள், கரும்பு, கேரட், பிஸ்கட், குருணை, அரிசி, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிள் பழங்களையே உணவாக உட்கொள்கின்றன. சில பாண்டாக்கள் இறைச்சியும் சாப்பிட்டாலும் இவை சைவத்தைத்தான் விரும்புகின்றன. இன்று உணவுவிரும்பிகளான இளைஞர்கள் பலரும் தங்களை 'ஃபுட்டி' என்று பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர். அந்த வகையில் பாண்டாக்கள், மிகப்பெரிய ஃபுட்டிக்கள்.
இவன் நடந்து வாரானா இல்லை உருண்டு வாரானா...
பாண்டாக்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில தங்கவோ தூங்கவோ செய்யாது இடம் மாறிக்கொன்டே இருக்கும் தன்மை வாய்ந்தது. இவை பெரும்பாலும் பாறைகளின் அடியே மற்றும் மரங்களின் அடிப்பகுதியையே தங்கள் வசிப்பிடமாக கொண்டுள்ளன. பாறைகளிலும் மரங்களிலும் இவை ஏறி, சறுக்கி விழுந்து மீண்டும் எழுந்து ஏறுவது அவர்களுக்கு வலிக்குமோ என்னவோ நமக்கு ரசிக்கத்தக்க காட்சிதான்.
சோம்பேறி பாண்டா
சீனாவில் அதிகாரப்பூர்வமாக சுமார் 2200 பாண்டாக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் 2000 காடுகளிலும், 200 உயிரியல் பூங்காக்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவை தவிர 180 சீனாவின் நிலப்பகுதியிலும், மேலும் 20 பாண்டாக்கள் மற்றநாடுகளில் இருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. இவ்வளவு குறைவாக உள்ள பண்டாக்களின் எண்ணிக்கையை பெருக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. காட்டிற்குள் இருக்கும் இவை சோம்பேறித்தனத்தால் சரியாக இனப்பெருக்கம் செய்யாததால், உயிரியல் பூங்காக்களில் இனப்பெருக்கம் செய்ய வைக்கப்படுகின்றன. சீனாவில் பாண்டாக்களுக்கு பாண்டா பார்ன் படங்களெல்லாம் காட்டுகிறார்களாம். சிறப்பு மூலிகைகளும் தரப்படுகிறதாம். அதே நேரம், சில விலங்கியல் அறிஞர்கள், பெண் பாண்டாக்களுக்கு இனப்பெருக்க காலம் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே என்றும் அவை பெருகாமல் இருக்க இதுதான் முக்கிய காரணமென்றும் கூறுகிறார்கள்.
அம்மா செல்லம்
பாண்டாக்கள் பிறக்கும்போது அதற்கு பார்வை தெரியாது. எனவே தன் தாயின் அரவணைப்பிலேயே மூன்று வருடங்கள் வாழ்கின்றன. பின்னர் அதனுடைய நான்காம் வயது முதல் தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொண்டு வாழ தொடங்குகிறது. இருப்பினும் தங்களுடைய இருபது வயதுக்கு மேல்தான் இனப்பெருக்கத்தினை மேற்கொள்கின்றன. ஒரு வருடத்தின் மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் முடிய அதனுடைய இனச்சேர்கை பருவமாகும்.
அரசியல் முக்கியத்துவம்
சோம்பேறியாக, சேட்டை செய்துகொண்டு, சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும் பாண்டாக்கள் சாதாரண ஆட்கள் அல்ல. உலக அளவில் அவற்றின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. சீனா, தன் பொக்கிஷமாகவும் அடையாளமாகவும் பாண்டாக்களை கருதுகிறது. சென்ற ஆண்டு, ஜெர்மனிக்கு இரண்டு பாண்டாக்களை பதினைந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கடனாக வழங்கியுள்ளது சீனா. இது, இரண்டு நாடுகளின் உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது. 1972இல் அமெரிக்காவுக்கு சீனா அன்பளிப்பாக வழங்கிய இரண்டு பாண்டங்கள், அப்பொழுது அவ்விரு நாடுகளின் உறவை சுமூகமாக்கின. இதைப் பார்த்த அப்போதைய இங்கிலாந்து எட்வர்ட், 1974இல் சீனா வந்த பொழுது தங்களுக்கும் பாண்டாக்கள் வேண்டுமென கேட்க, சில வாரங்களுக்குப் பிறகு அனுப்பப்பட்டன. தமிழர்களின் அன்பை பெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முன்னாள் அமெரிக்க அதிபர் மனைவி மிச்செல் ஒபாமா, முன்னாள் பிரான்ஸ் பிரதமர் ஃப்ரான்காயிஸ் என பல உலக தலைவர்களும் பாண்டாக்களுடன் விரும்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இது போக பாண்டாக்கள் பல்வேறு பொருட்களின் விளம்பரங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் கடைவீதிகளில் ஆங்காங்கே பாண்டா சிலை, படம் அல்லது பொம்மை என ஏதேனும் ஒன்றைப் பார்க்கலாம். 'குங்ஃபூ பாண்டா' திரைப்பட வரிசைக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. பொதுவாகவே மனிதர்களுக்கு பெரிய கண்களும், உருளையான தவழும் உடலும் மிகவும் விருப்பமானதாக இருக்குமென்று மனோதத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் தான் குழந்தைகளை நாம் அள்ளிக் கொஞ்சுகிறோம். பாண்டாக்களும் அத்தகைய உருவத்தைப் பெற்றிருக்கின்றன. 'பாண்டாக்கள் உலகத்திற்கே பொதுவானவை, ஏனெனில் அவை கருப்பாகவும் இருக்கின்றன, வெள்ளையாகவும் இருக்கின்றன, ஆசியர்களாகவும் இருக்கின்றன; என்று நகைச்சுவையாக சொல்லப்படுவதுண்டு. உண்மைதான், அன்பால் பாண்டாக்கள் உலகத்திற்கே பொதுவானவை தான்.