விலை மதிப்பில்லாத உயிரை காப்பாற்றும் பல மருந்துகளின் விலை பலருக்கும் எட்டா கனி. உயிர் காக்கும் மருந்துகளின் விலையை கேட்டால் ஆரோக்கியமானவர்களுக்கே ஹார்ட் அட்டாக் வந்து விடும். அதுவும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான மருந்துகளின் விலை லட்சங்களில் உள்ளது. இந்தியாவில் 65% மக்கள் மருந்துகளை வாங்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்கிறது ஒரு சர்வே ரிப்போர்ட்.
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த நிலை இல்லை, காரணம் அங்குள்ள ‘ஜெனரிக் மருந்தகங்கள்‘. 'ஜெனரிக் மருந்துகள்' என்றால் என்ன என்பது பலருக்கும் தெரியாது. சரி தெரிந்துக்கொள்ள அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா? நிச்சயம் உள்ளது. அது அந்த மருந்துகளின் விலை. சாதாரண ‘பாராசிட்டமால்‘ 10 மாத்திரையின் விலை ஜெனரிக் மருந்தாக வாங்கினால் மூன்று ரூபாய் அதே மருந்தை ‘பிராண்டட்‘ மருந்தாக வாங்கினால் 18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சரி இந்த ‘ஜெனரிக் மருந்துகள்' என்றால் என்ன?
பிராண்டட் மருந்துகள் என்றால் அந்த மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனங்களே தயாரித்து விற்பது. ஒரு மருந்தை உருவாக்கிய நிறுவனத்திடம் அந்த மருந்தைத் தயாரிக்கும் உரிமம் மற்றும் விற்பனை உரிமம் 14 வருடங்கள் வரை இருக்கும். இந்தக் காப்புரிமை காலம் முடிந்த பின் மற்ற கம்பெனிகளால் தயாரிக்கபடுவதுதான் ஜெனரிக் மருந்து. காப்புரிமை உள்ள காலம் வரை வேறு எந்த கம்பெனியாலும் அந்த மருந்தை தயாரித்து விற்க முடியாது. அதனால் அந்த 14 ஆண்டுகள் வரை மருந்தை தயாரித்த கம்பெனிகள் வைத்ததுதான் விலை. பல பன்னாட்டு நிறுவனங்கள் மருந்துகளின் விலையை லட்சங்களில் கூட நிர்ணயித்தது. இதனைத் தடுக்கவே இந்திய அறிவுசார் உரிமைச் சட்டம் மார்ச் 12, 2011ல் திருத்தம் செய்யப்பட்டது.
காப்புரிமை பெற்ற நிறுவனம் கொள்ளை லாபம் அடிக்கும் வகையில் செயல்பட்டால் அரசு காப்புரிமை பெற்றவரின் அனுமதி இன்றி, காப்புரிமை பெறாத மூன்றாவது நபரிடம் குறைந்த விலையில் அம்மருந்தை தயாரித்து விற்கும் வகையில் ‘கட்டாய உரிமம்‘ வழங்க முடியும். ஜெர்மனி நாட்டின் ‘பேயர்‘ (BAYER) நிறுவனம் ‘நெக்சாவர்‘ (NEXAVAR) என்ற சிறுநீரகப் புற்றுநோய்க்கான மருந்தை 120 மாத்திரைகள் (ஒரு மாதத்திற்கு ஒரு நோயாளிக்கு தேவையான அளவு) 2.80 லட்சம் என்று விலை நிர்ணயித்தது. அதனால் அதே மருந்தை தயாரிப்பதற்கான ‘கட்டாய உரிமத்தை‘ இந்திய நிறுவனமான ‘நேட்கோ பார்மா' (NATCO PHARMA) விற்கு வழங்கியது. அந்நிறுவனம் அதே மருந்தை வெறும் 8,880 ரூபாய்க்கு (120 மாத்திரைகள் விற்பனை செய்கிறது.
இப்படி மாத்திரைகளின் விலை பல லட்சங்களைத் தொடும் போது ‘கட்டாய உரிம‘ சட்டத்தின் படி வேறு நிறுவனத்திற்கு, தயாரிக்கும் உரிமத்தை வழங்க முடியும். ஆனால் பல ஆயிரங்கள் முதல் பல நூறுகள் வரை விலை வித்தியாசம் உள்ள மருந்துகளுக்கு இந்த சட்டம் பொருந்தாதே.
பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு மருந்தைக் கண்டுபிடிக்க செலவு செய்த ஆராய்ச்சி செலவு மற்றும் மருந்தை சந்தைப்படுத்துவதற்கு ஆகும் மார்க்கெட்டிங் செலவு, அது மட்டும் இல்லாமல் தங்களுடைய பிராண்ட் மருந்துகளை சிபாரிசு செய்ய சில மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன், இது அத்தனையும் சேர்த்துதான் மருந்துகளின் விலையை நிர்ணயிக்கின்றன இந்த பன்னாட்டு மருந்து கம்பெனிகள். உண்மையில் அந்த மருந்தை தயாரிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பது 14 வருடங்கள் கழித்துதான் தெரிய வரும். மருந்து தயாரிப்பதற்கான மூல பொருட்களின் விலை மலிவாக இருந்தாலும் பல கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அந்த 14 வருட காலத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
சரி எந்த காலத்திலோ கண்டுபிடிக்கபட்ட பல மருந்துகள் காப்புரிமை காலம் முடிந்த பின் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு ஜெனரிக் மருந்தாகக் குறைந்த விலையில் கிடைப்பது எத்தனை பேருக்கு தெரியும்? பெரும்பாலும் அனைத்து டாக்டர்களும் பிராண்டட் மருந்துகளையே பரிந்துரைப்பார்கள். கேட்டால் ஜெனரிக் மருந்துகளின் தரம் நம்பகத்தன்மையற்றது என்றும் அதனால்தான் பிராண்டட் மருந்துகளை பரிந்துரைப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படுவது ஜெனரிக் மருந்துகள்தான். ஜெனரிக் மருந்துகளின் தரம் குறைவு என்றால் அதை எப்படி அரசாங்க ஆஸ்பத்திரியில் பயன்படுத்துவார்கள்?
சரி, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கொடுக்கும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்கிறதா? எங்கெல்லாம் ஜெனரிக் மருந்துகள் கிடைக்கின்றன? மருத்துவர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கு அவர்களின் பதில் என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்...
அடுத்த பகுதி:
சோதனை எலிகளாய் இந்தியர்கள்... மருத்துவம் மட்டும் ஃபாரீனுக்கு... உயிரின் விலை #2