Skip to main content

பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் ஜீரோ சைஸ் மிஸ் ஆகிறதா? வழியெல்லாம் வாழ்வோம் #15

Published on 15/06/2018 | Edited on 15/06/2018

 

life style

 

ஓர் ஆணின் உடல்நலமும் அறிவுநலமும் அவனுக்கு மட்டுமே பயன்படும். அவனது உடல்நலக்கேடு அவனை மட்டுமே பாதிக்கும். ஆனால் ஒரு பெண்ணின் உடல்நலமும் அறிவு நலமும் அவளது பரம்பரைக்கே தேவையான காரணிகள். ஆனால், துரித உணவென்பது மட்டுமே வாழ்வியலாய் மாறிப்போன இந்தப் பதின் ஆண்டுகளில் தான் பெண்களின் உடல்நலம் என்பது மொத்தமாய்க் கேள்விக்குறியாகி நிற்கிறது. பொருளாதார உறவு நிமித்தமாய் ஒவ்வொரு பெண்ணும் அவரவர் படிப்புத்தகுதிக்கு ஏற்ற வகையில் பணிக்கு செல்லவேண்டிய நிலை கட்டாயமாகிப்போனது இன்று. அந்தக் கட்டாயத்தின் பிடியில் சிக்குண்டு அவர்கள் கவனிக்க மறந்தது உணவு முறைகளை. 2 மினிட்ஸ் நூடுல்ஸ் மட்டுமே தேசிய உணவாகிவிட்டது. ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்ற பேதமெல்லாம் இதில் மட்டும் இல்லவே இல்லை.


இன்றைய இளம்பெண்களின் மனோநிலை:


தங்கள் உடல்நலனைப் பேணவேண்டிய பெண்கள், தங்கள் வடிவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கரீனா கபூருக்குப் போட்டியாய், "சைஸ் ஜீரோ" வடிவத்துக்கு மாறிவிட வேண்டும் என்று கொலைபட்டினி கிடப்பது மேல்த்தட்டு பெண்களின்  வாடிக்கையாகிவிட்டது. உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் இன்று எல்லாப் பெண்களின் நோக்கம், எடைக்குறைப்பு மட்டுமே. இன்றைய பெண்கள் இப்படித் தன்னைத்தானே காத்துக்கொள்வதும் இல்லை. மேலும், தங்கள் வடிவத்தைக் காத்துக்கொள்கிறோம் என்று, குழந்தைகளுக்கு பாலூட்டாமல் இருப்பதை நாகரீகமாக நினைத்துக்கொள்கின்றனர். இப்படியாக இரெண்டு தலைமுறைகளின் உடல்நலமும் கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்த சமூகமும் பெண்களின் உடல்நிலையில் பெரிதாய்க் கவனம் கொள்வதாகத் தெரியவில்லை. ஒரு முறை பூக்கும் பூக்களின் நலம் காக்க உரம் தொடங்கி ஓராயிரம் வகையில் கவலை கொண்டு, அதீத அக்கறை கொள்ளும் யாரும்; பூப்படைந்த பின்னும் கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்களான பெண்களின் நலனில் கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை.


பெண்களின் பருவங்கள்:


பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என்று பெண்களை வாழ்நாளின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளது நம் தமிழ் நாகரீகம்.


1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 க்கு மேல்

 

இந்த ஏழு பருவங்களிலும் பெண்களின் உடல் சார்ந்து வரும்பிரச்சனைகளும், அதை எப்படி இயற்கையோடு இயைந்த உணவியல் முறைகளில் சரிப்படுத்த இயலும் என்பதை பார்க்கலாம்.


தாய்ப்பாலின் முக்கியத்துவம்:


குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குறைந்தது ஆறு மாத காலம் வரையாவது தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், சுவாசக்குழாய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கின்றன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு எந்த நோயாயினும் அந்தநோயின் தாக்கம் குறைவாகவே ஏற்படுகிறது. மற்ற உணவுகளையும், பானங்களையும் உண்டு வளர்ந்த குழந்தைகளை விட, தாய்ப்பால் குடித்துவளர்ந்த குழந்தைகள் ஊட்டமாக இருப்பதாக உலக சுகாதர நிறுவனம்தெரிவிக்கிறது. பிறந்து ஆறுமாதம் வரை எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்டால், ஒரு ஆண்டிற்கு சுமார் 1.5 மில்லியன் சிசுக்களை காப்பாற்ற முடியும், மேலும் பல மில்லியன் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஹெச்.ஐ.வீ யால் பாதிக்கப்பட்ட பெண், தாய்ப்பால் மூலம் சிசுவிற்கு வியாதியை தொற்றுவிப்பதற்கான அபாயம் உள்ளது. எனவே அவர்களைத் தவிர பிற பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுத்தல் நலம்.

 
தாய்ப்பால் வங்கி:


தாய்ப்பால் சுரப்பு அதிகமில்லாத தாய்மார்களுக்கும், தொட்டில் குழந்தை திட்டத்தால் அரசால் எடுத்து வளர்க்கப்படும் அனாதைக் குழந்தைகளுக்காகவும் தாய்ப்பால் வங்கி அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான தாய்ப்பால் சுரப்பு உள்ள அன்னையர்களிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டு முறையாக சேமிக்கப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த அடிப்படை ஊட்டச்சத்துக்கு பிறகான உணவியல் தேவைகளை வரும் வாரங்களில் பார்ப்போம்.


குழந்தைகளின் உணவும் கார்ப்ரேட் கலாச்சாரமும்:

 
கண்ணே, மணியே என்று பிள்ளைகளைக் கொஞ்சிய காலம் போய், அமுல் பேபி என்று எப்போது கொஞ்ச வைத்ததோ அப்போதே குழந்தைகள் சார்ந்த அனைத்திலும் தன் ஆக்கிரமிப்பை அரங்கேற்றத தொடங்கிவிட்டது கார்ப்ரேட் உலகம். உணவு, உடை, மருந்துகள், சோப்பு என்று அத்தனையும் பிராண்டட் மயமாய் ஆகிப்போனதையும், அதையே பெருமையென்று எண்ணிய பெற்றோரையும் இரெண்டு தலைமுறைகளாய் நம் வீட்டுப் பெரியவர்கள் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் இருக்கின்றனர்.


இந்த உலகமயமாக்கலில் ஒழிந்தே போனது நம் ஒட்டு மொத்தப் பாரம்பரியம். அவையென்ன என்பதை பின்வரும் நாட்களில் அலசலாம்.

முந்தைய பதிவு: பெண்கள் மனம் மாறுவது ஏன் தெரியுமா? வழியெல்லாம் வாழ்வோம் #14