நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கான அறிகுறிகள் சிறுநீர் மூலமே முதலில் தெரிகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். சிறுநீர் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன, எவ்வளவு தண்ணீரை தினமும் நாம் குடிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு டாக்டர் அருணாச்சலம் விடையளிக்கிறார்.
சிறுநீர் நுரை போன்று வெளியேறினால் அதில் புரோட்டின் வெளியேறுகிறது என்று அர்த்தம். அதுபோன்ற நேரங்களில் சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். காலையில் முதலில் வெளியேறும் சிறுநீரைத் தவிர மற்றவை தண்ணீரின் நிறத்தில் இருப்பது தான் நல்லது. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு சிறுநீரில் புரோட்டின் வெளியேறுவதை நாம் பார்க்க முடியும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் இது நிகழும். இதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது மருத்துவரின் பரிந்துரை பெறுவது மிக அவசியம். பரிசோதனை மையங்களில் தேவையில்லாத பரிசோதனைகளை மேற்கொள்வதையும் மக்கள் தவிர்க்க வேண்டும். அதுவே உங்களை நோயாளியாக்கி விடவும் வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனையோடு சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளும்போது தான் உங்களுக்கு வந்துள்ளது நோய்தானா என்பதையே அறிந்துகொள்ள முடியும்.