தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டிக் கொடுத்தார்.
இந்த தென் மாவட்ட தமிழக மக்களுக்காக முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டும்போது இடையில் கட்டுமான பணி பாதிக்கப்பட்டது. அதனால், அணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆங்கில அரசு தெரிவித்தது. இருந்தாலும் தான் எடுத்த முயற்சியை விடக்கூடாது என்ற முடிவுடன் பென்னிகுக் தனது சொந்த நாடான லண்டனுக்குச் சென்று அங்கு தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கொண்டு வந்து தமிழக மக்களுக்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்தார்.
இதனால், தென் மாவட்ட மக்கள் பென்னிகுக்கை கடவுளாக நினைப்பதும், தங்கள் பிள்ளைகளுக்கும், கடைகளுக்கும் பென்னிகுக் பெயரை வைத்து மரியாதை செய்துவருகின்றனர். அதேபோல், பென்னிகுக் பிறந்த நாளான பொங்கல் திருநாள் அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பென்னிகுக்காகவே பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
தமிழக அரசும் பென்னிகுக் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்திருக்கிறது. அதுபோல் முல்லை பெரியார் அணை மற்றும் தேக்கடியில் பென்னிகுக் சிலையை தமிழக அரசு வைத்துள்ளது. கூடலூர் லோயர் கேம்பில் பென்னிகுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மணிமண்டபம் கட்டி 6 அடி உயரத்தில் வெண்கல சிலையை திறந்து வைத்தார். மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பென்னிகுக் சிலை உள்ளது. உத்தமபாளையத்திலும் சிலை உள்ளது. இப்படி தென் மாவட்ட மக்களுக்காக வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்த பென்னிகுக்கை தென் மாவட்ட மக்களும், அரசும் தொடர்ந்து மரியாதை கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற சில மாதங்களிலே முல்லைப் பெரியார் அணையைக் கட்டி கொடுத்த பென்னிகுக்கு அவரது சொந்த நாடான லண்டனில் சிலை வைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள தமிழ் சங்கம் மூலம் ஏற்பாடு செய்து வந்தனர். அதேபோல், லண்டனில் பென்னிகுக் சிலை வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10ம் தேதி பென்னிகுக் சிலையை தமிழக அரசு சார்பில் திறக்கப்பட இருக்கிறது.
இதற்காக லண்டனில் இயங்கும் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள விளம்பரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், லண்டன் மெட்ரோ ரயில் நிலையங்களில் முல்லை பெரியார் அணையில் பென்னிகுக் இருப்பது போலவும், அதோடு முதல்வர் ஸ்டாலின் படத்தையும், சிலையைத் திறந்து வைக்க வருகை தரும் அமைச்சர் ஐ.பெரியசாமி படத்தையும் வைத்துள்ளனர். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.