பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ளது நெய் குப்பை கிராமம். இந்த ஊரை சேர்ந்த பூமாலை - ராஜகுமாரி தம்பதிகளுக்கு சந்துரு, சத்தியா, சஞ்சய் என மூன்று பிள்ளைகள். இவர்கள் மூவரும் கண் பார்வையற்றவர்கள். இவர்கள் தந்தை பூமாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். விதவையான அவரது மனைவி ராஜகுமாரி மூன்று பிள்ளைகளையும் ஏழ்மை வறுமை வாட்டிய நிலையிலும் மிகுந்த சிரமத்துடன் பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.
இதில் மூத்த பிள்ளை சந்துரு திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வருகிறார். இந்த குடும்பத்தினர் படும் கஷ்டத்தை பற்றி பலரும் அனுதாபப்பட்டனர். இது மீடியாக்கள் மூலம் வெளி உலகுக்கு வந்தது. குன்னம் அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் சிறிது உடல் நிலை கோளாறினால் கேரளாவில் சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார். அவருக்கும் இந்த விசயம் தெரிய வந்தது.
இதையடுத்து எம்எல்ஏ ராமச்சந்திரன் அங்கிருந்தபடியே தனது உ தவியாளருக்கு தகவல் சொல்லி அந்த குடும்பத்தினருக்கு உதவிடுமாறு பணித்தார். இதனடிப்படையில் வேப்பந்தட்டை ஒ.செ. சிவப்பிரகாசம் மூலம் ராஜகுமாரி குடும்பத்தினரை அதிமுக பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்திற்கு இன்று காலை வரவழைக்கப்பட்டு கட்சியினர் முன்னிலையில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளனர்.