Skip to main content

மதுரைக்கு வருகை தரும் விஜய்; ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Published on 01/05/2025 | Edited on 01/05/2025

 

Vijay visits Madurai; restrictions imposed on fans

கோவையில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த வாரம் (26 & 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் பெரும் அவதியுற்றனர். அதே சமயம் விமான நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமலும், உரிய அனுமதி பெறாமலும் அதிக அளவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக த.வெ.க. மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி ஓய்வு எடுக்கச் சென்ற தனியார் விடுதி வரையில் திறந்தவெளி வாகனத்தில் பயணம் மேற்கொண்டு ரோடு ஷோ நடத்தினார். அச்சமயத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்  வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அதோடு விஜய் நடத்திய ரோடு ஷோவின் போது அவரது வாகனத்தில் இரு இளைஞர்கள் ஏறினார். அதில் ஒரு இளைஞர் “நாளைய முதல்வரே” எனத் தொடர்ந்து உரகமாகக் குரல் எழுப்பினார். அதன் பின்னர் பாதுகாவலர் மூலம் அங்கிருந்து இருவரும் பாதுகாப்பாகக் கீழே இறக்கி விடப்பட்டனர். அதே போன்று மரத்திலிருந்து விஜய் வாகனத்தின் மீது தொண்டர் ஒருவர் குதித்தது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையெல்லாம் சுட்டிக்காட்டி அரசியலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு கண்டிப்பும், சுய ஒழுக்கமும் 100% சமரசமற்றதாத்தான் இருக்க வேண்டும் என விஜய் நேற்று (30.04.2025) எக்ஸ் சமூக வலைத்தளத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இத்தகைய சூழலில் தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக விஜய் இன்று (01.05.2025) மாலை சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரைக்கு வருகிறார். அவரது பயணத்திட்டத்தின் படி மாலை 04:00 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். முன்னதாக விஜய் இன்று காலை 7 மணிக்கு வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இதன் காரணமாக த.வெ.க. தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் மதுரையில் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மதுரை விமான நிலையத்தில் காலை முதலே கடும் நெரிசல் காணப்படுகிறது. அதோடு விமான நிலையம் அருகே விஜய் ரசிகர்கள் பைக் சாகசம் போன்றவற்றிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் நெரிசல் காணப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அதில் விமான நிலைய வளாகத்துக்குள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே வர வேண்டும். ரசிகர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay visits Madurai; restrictions imposed on fans

மேலும் விமான நிலையத்திற்கு வெளியே இருந்து ஒரு 1கி.மீ. தொலைவில் இருந்து 5 கி.மீ. தொலைவிற்குச் சாலையோரத்தின் இரு புறத்திலும் ரசிகர்கள் நின்று கொள்ளலாம். விஜய் பரப்புரை வாகனத்தில் இருந்தபடியே சாலையோரமாக உள்ள பொதுமக்களையும், ரசிகர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்துவிட்டுச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கொடைக்காணலிலுக்கு விஜய் படப்பிடிப்பிற்காகச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்