
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்புகள் மற்றும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், அவர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி (மே 01) சர்வதேச அளவில், சர்வதேச தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின உறுதி மொழியினையும் ஏற்றார்.
இதனையடுத்து அவர் பேசுகையில், “திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான் என்று தந்தை பெரியார் பெருமையோடு குறிப்பிட்டு காட்டி இருக்கிறார். கடந்த 1932ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழிலே மொழிபெயர்த்து தந்தவர்தான் தந்தை பெரியார். ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கு சென்றுவிட்டு தமிழகத்திற்கு திரும்பிய தந்தை பெரியார் இனி அனைவரையும் தோழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் எடுத்துச் சொன்னார். மே நாளை தமிழ்நாட்டோட அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் இசை நிகழ்ச்சிகளோடு கொண்டாட வேண்டும் என்று சென்னை நகரம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது.
8 மணி நேரம் வேலை எனும் உரிமை போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன் முதலில் சிந்தனை சிற்பி சிங்காரவேலருடைய தலைமையிலே மே தினம் கொண்டாடப்பட்டது சென்னை மாநகரத்தில் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். அதற்கு முன்பே இந்திய தொழிலாளர் வேலை நேரத்தை 12 மணி நேரமாக குறைக்க பெரும் முயற்சிகளை நீதிக்கட்சி தலைவரான டி.எம். நாயர் எடுத்திருக்கிறார். உழைப்புக்கு மதிப்பளித்து உண்மையாக இருக்க வேண்டும் என்று சொன்னால் உழைப்பவனுக்கு முதலில் மதிப்பளிக்க வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா.
அதன்படியே 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலே தி.மு.க. வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்த உடனே மே 1 அன்று ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிஞர் அண்ணா கொண்டு வந்தார். அதற்கு பிறகு பொறுப்பேற்ற கலைஞர் மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தார். அதன் பிறகு சமூக நீதிக்காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது மே 1ஆம் தேதி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திற்கும் தொழிலாளர் தினமாக விடுமுறையை அறிவித்து ஊதியத்தோடு அந்த விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதையும் கலைஞர் நிறைவேற்றி தர பாடுபட்டார் என்பது நன்றாக தெரியும். மே தின பூங்காவையும் உருவாக்கி தந்தவர் கலைஞர் தான். பூங்காவை மட்டுமல்ல அதன் உள்ளே அமைந்திருக்கக்கூடிய நினைவு சின்னத்தை ஏற்படுத்தி தந்தவரும் கலைஞர் தான்” எனப் பேசினார்.