சீனாவைச் சேர்ந்த ஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனம், உலக அரங்கில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை பல மேற்கத்திய நாடுகள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா இதை தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் தற்போது ஹுவாய் உட்பட அதன் 70 துணை நிறுவனங்களுக்கு வர்த்தக தடை விதித்துள்ளது.
ஹுவாய் 5ஜி தொழில்நுட்ப சேவை என்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது. மேலும் ஹுவாய் நிறுவனம் ஈரான் நாட்டிற்கு மறைமுகமாக நிதியுதவி அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் தொடர்ந்து வர்த்தக போர் நிலவி வரும் நிலையில் சீன நிறுவனமான ஹுவாய்க்கு வர்த்தக தடை விதித்துள்ளது அமெரிக்கா.
உடனடியா அமலுக்கு வரும் இந்த தடையால் ஹுவாய் நிறுவனம் அமெரிக்க சந்தைகளில் அந்நாட்டு அரசின் அனுமதியின்றி இனி பொருட்களை வாங்க முடியாது. மேலும் அந்நாட்டு பங்கு சந்தையிலும் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது. அமெரிக்கா சீனா இடையே அதிகரித்து வரும் வர்த்தக போர், ஹுவாய் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆகியவையே இந்த தடைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக வரும் நாட்களில் ஹுவாய் போனின் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.