
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கூறினாலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பயங்கரவாத அமைப்பை, பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி முடிவுகளை இந்தியா தொடர்ந்து எடுத்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும், இந்தியா- பாகிஸ்தான் எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்தது.
இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, வான்வெளியை இந்திய பயன்படுத்தத் தடை, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, அட்டாரி எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்குத் தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறுகையில், “பஹல்காமில் சமீபத்தில் நடந்த சோகத்தில், நிரந்தர பழி சுமத்தும் விளையாட்டு நடந்துள்ளது. இது முடிவுக்கு வர வேண்டும். பொறுப்பான நாடாக, பாகிஸ்தான் எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்கத் தயாராக இருக்கிறது. பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்தையும், அதன் அனைத்து வடிவங்களையும் கண்டித்து வருகிறது” என்று தெரிவித்தார்.