அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்குத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று நோக்கத்தில் டொனால்ட் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், லாஸ் ஏஞ்சல்ஸின் கோச்செல்லா பகுதியில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, பதிவு செய்யப்படாத காரில் வந்த 49 வயது நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவரிடம் உரிய அடையாள அட்டை இல்லாததை கண்டுபிடித்தனர். மேலும் அந்த காரை சோதனை நடத்தியதில், குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள் இருந்தது.
இதையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அந்த நபர் வெம் மில்லர் என்பது தெரியவந்தது. மேலும் அவர், டொனால்ட் டிரம்ப்பை சுட்டுக் கொல்லும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் காயமடைந்த டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கோல்ஃப் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்த டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் டிரம்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்கெனவே, இரண்டு முறை டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.