
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இருதரப்பும் மோதி வரும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான போரில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேலில் 260 பேர் கலந்து கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியில், 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும், காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் 1.2 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சூழலில், காசா எல்லை முழுவதுமாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர் கைப்பற்றியிருந்த அந்தப் பகுதியை தற்போது இஸ்ரேல் ராணுவத்தினர் கைப்பற்றிவிட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோயவ் காலன்ட் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர், காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட, அந்த பகுதிக்கு, மின்சாரம் விநியோகம், உணவுப் பொருட்கள், எரிபொருள், போன்ற அத்தியாவசிய பொருட்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் தற்போது மனித மிருகங்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. காசா பகுதியை முழுமையாக முற்றுகையிடுமாறு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பகுதி அனைத்தும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு, போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இந்த போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது, “ஹமாஸ் படையினர் மீதான தாக்குதல் தற்போது தான் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் எதிரிகளுக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும்” என்று கூறியுள்ளார்.