/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/moditrudeuni.jpg)
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார். கனடா நாட்டு குடிமகனான நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
அவரது குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வேளையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது.
இதனை தொடர்ந்து, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடந்த 14ஆம் தேதி புகார் அளித்தது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இந்தியாவில் உள்ள கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் 6 பேர் வெளியேற்றி, இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளிநாட்டு தலையீட்டு தொடர்பான விசாரணை ஆணையத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆஜரானார். அப்போது பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “நிஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்பதற்கான உளவுத்தகவலை மட்டுமே இந்திய அரசிடம் பகிர்ந்து கொண்டோம். இந்தியாவின் தொடர்பிற்கான ஆதாரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. நிஜார் கொலை மூலமாக இந்தியா, கனடாவின் இறையாண்மையை மீறிவிட்டது. மோடி அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் விவரங்கள், இந்தியாவிற்கு பகிரப்பட்டு, அந்த விவரங்கள் கிரிமினல் கும்பல்களுக்கு செல்கிறது. இது கனடா நாட்டவர்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுக்கும்” என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)