சீனாவைச் சேர்ந்த ஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனம், உலக அரங்கில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை பல மேற்கத்திய நாடுகள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா இதை தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில் கடந்த வாரம் ஹுவாய் உட்பட அதன் 70 துணை நிறுவனங்களுக்கு வர்த்தக தடை விதித்தது.
உடனடியா அமலுக்கு வந்த இந்த தடையால் ஹுவாய் நிறுவனம் அமெரிக்க சந்தைகளில் அந்நாட்டு அரசின் அனுமதியின்றி வணிகம் செய்யமுடியாது என்ற நிலை ஏற்பட்டது. மேலும் அந்நாட்டு பங்கு சந்தையிலும் பிரதிநிதித்துவத்தை இழந்தது.
இந்நிலையில் ஹுவாய் போன்களில் இனி கூகுள் ப்ளே ஸ்டோர், யூடியூப், மேப், போன்ற செயலிகள் வராது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனம், இப்பொது பயன்பாட்டில் உள்ள போன்களில் இந்த கூகுள் சேவைகள் தொடரும், ஆனால் இனி வரும் ஹுவாய் போன்களில் ப்ளே ஸ்டோர், யூடியூப், மேப் போன்ற வசதிகள் இடம்பெறாது என அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் அதிகளவு பயன்படுத்தும் இந்த செயலிகள் இல்லாமல் இந்த ஸ்மார்ட் போனை யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால் இந்நிறுவன மொபைல் போனின் வர்த்தகம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.