
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கல்லாக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தனியார் மதுபான உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல வகையான மது உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மது வகைகள் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்த கிராமத்திற்குள் உள்ள இந்த மது உற்பத்தி தொழிற்சாலையை மூடக் கோரி மகளிர் ஆயம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தியுள்ளது. இந்நிலையில் கல்லாக்கோட்டை தனியார் மது உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் பேரில் இன்று (06.03.2025) மாலை திடீரென வந்த மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சின்கா தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அமலாக்கத்துறையினர் வரும் போது தொழிற்சாலைக்குள் இருந்த ஊழியர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு விசாரனையும் நடந்துள்ளது. இரவிலும் தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது.