
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து வழக்குத் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி இரவு 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அந்த நேரத்தில் சீமான் புகார் கொடுத்த நடிகை குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியது பலரையும் முகம் சுழிக்கவைத்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், ‘பெண்கள் குறித்து பேசும் போது தலைவர்கள் கண்ணியமாக பேச வேண்டும் என்று பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “எது கண்ணியமான பேச்சு என்று நீங்கள் சொல்லுங்கள்? என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படிச் சொல்லுவீர்கள்? என்ற கேள்வி கேட்ட சீமான் புகார் கொடுத்த நடிகையை பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டதோடு அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். அவர்தான் பெண், எங்கள் வீட்டில் எல்லாம் பெண் இல்லை. எங்கள் மனது காயப்படாதா?” என்று ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நடிகை தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் பாலியல் தொழிலாளியா? இவ்வளவு நாள் நீ தப்பித்து இருக்கலாம்; ஆனால் இனி நீ தப்பிக்கவே முடியாது. நீ நாசமா போய்டுவ.... பாலியல் தொழிலாளியா நான்..? என்னுடைய கண்ணீர் உன்ன சும்மா விடாது” என்று ஒருமையில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.