இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (21-09-24) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரணில் விக்ரம சிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயக்க, அநுரா குமார திஸநாயக, இலங்கையின் கடைசிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 75% வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கையும் அன்றே தொடங்கியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதன்படி 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக, இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (23-09-240 இலங்கையின் 9வது அதிபராக அநுரா குமார திஸநாயக அதிபராக பதவியேற்றார். மார்க்சிய சித்தாந்தங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்ட அநுரா குமார திஸநாயக, கடந்த 1987ஆம் ஆண்டில் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் சேர்ந்தார். கடந்த 2000ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான அநுரா குமார திஸநாயக, 2004இல் சந்திரகா குமாரதுங்க அமைச்சரைவில் இடம்பெற்றார். அதன் பின், 2004இல் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவரான அநுரா குமார, விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போரில் மகிந்த ராஜபக்சவின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தார்.
கடந்த 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற எதிர்கட்சி கொறடாவாக செயல்பட்ட இவர், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசியல் அமைப்பு சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். அதன் பின், 2022இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி அமைப்பிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது. பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள், ஊழல் ஒழிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பரப்புரை செய்து இந்த தேர்தலை சந்தித்து இலங்கையின் 9வது அதிபராகப் பதவியேற்றுள்ளார்.
கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, அநுரா குமார திஸ்நாயகவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.