ராஜபாளையத்தில் பி.காம் பட்டப்படிப்பு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ, ஐஏஎஸ் தேர்வுக்கு சீரிய முயற்சி இப்படி கனவுடன் இருந்த இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாமல் நிர்மூலமாக்கியுள்ளது காதல் தோல்வி. அப்படியொரு நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது கன்னியாகுமரியில்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்மலையைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் முருகனையே சுற்றி சுற்றி வந்துள்ளார். அடையாளமே தெரியாத அந்த நபர் யார் என அருகில் சென்று விசாரிக்கையில் அந்த நபர் தனது உறவினர் முத்து என்பது தெரிந்தது அதிர்ந்து போனார் முருகன். மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன முத்துவை பல இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில் முத்து கிடைத்த செய்தியை அவரது குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார் முருகன்.
தொடர்ந்து முத்துவை சலூனுக்கு அழைத்து சென்று அழகுபடுத்தி, புது உடைகளை வாங்கித்தந்துள்ளார். சம்பவம் அறிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த முத்துவின் குடும்பத்தார் முத்து குறித்து தெரிவிக்கையில், ராஜபாளையத்தில் பி.காம் பட்டப்படிப்பு முடித்த முத்து, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் முடித்துள்ளார். தொடர்ந்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் விடுதியில் தங்கி இருந்து தேர்வு எழுதி வந்துள்ளார். அதேநேரம் காதல் தோல்வியால் சற்று மனமுடைந்து காணப்பட்டார் முத்து. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி தங்கியிருந்த விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். சென்னை காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காத முத்து தனது உறவினர் முருகன் மூலமாகக் கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.