மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுவருகிறது. அந்தவகையில், நெடுங்காலமாக திண்டுக்கல் மாநகராட்சியில் கருணை அடிப்படையில் கிடைக்கப் பெற வேண்டிய பணி கிடைக்காமல் பலர் இருந்துவந்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி பரிந்துரையின்படி அவர்கள் 44 பேருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார். சென்னையில் பணி நியமன ஆணை பெற்ற அவர்கள், முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடத்தில் அப்பணி ஆணைகளை வைத்து மரியாதை செய்தனர். மேலும், திண்டுக்கல் திரும்பிய அவர்கள் அமைச்சர் ஐ. பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், ஐ. பெரியசாமியிடம் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.
44 நபர்களில், 32 துப்புரவு பணியாளர்கள், 12 அலுவலக உதவியாளர்கள் பணி நியமன ஆணையைப் பெற்றனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், மாநகரச் செயலாளர் ராஜப்பா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.